திண்டுக்கல் அருகே உள்ள அடுக்கம் பகுதியில் 149 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டப்பட உள்ளது.
தமிழகத்தில் திண்டுக்கல் உள்பட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய சுகாதாரத்துறை மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்துக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. அதையடுத்து திண்டுக்கல், நீலகிரி, நாமக்கல், ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இதையொட்டி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வந்த டாக்டர் விஜயகுமார் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதியதாக நியமிக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து பொறுப்பேற்றுக் கொண்ட விஜயகுமார் உடனே மருத்துவக்கல்லூரி அமைய உள்ள அடுக்கம் பகுதிக்கு சென்று பார்வையிட்டார். அவருடன் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு உள்பட சில டாக்டர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன்பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய டீன் விஜயகுமார், "திண்டுக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி 149 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள உள்ளது. இதற்கான மத்திய அரசு 60 சதவீத நிதியை மாநில அரசு 40 சதவீத நிதியும் வழங்கும். புதிய மருத்துவ கல்லூரியின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. இதற்கான திண்டுக்கல் அடுக்கம் பகுதியில் முதற்கட்டமாக 20 கோடி மதிப்பீட்டில் மருத்துவக் கல்லூரியின் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. பொதுப் பணித்துறையின் தனிப் பிரிவு அதிகாரிகள் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய மருத்துவக்கல்லூரி வருகிற 2020-2021 ம் கல்வியாண்டில் இருந்து செயல்பட தொடங்கும். இந்த கல்லூரியில் 150 இடங்கள் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் பணியாளர்கள் நியமனம் ஒரு சில மாதங்களில் நடைபெறும். இப்போது செயல்பட்டு வரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனை இந்த மருத்துவ கல்லூரியில் மருத்துவமனையாக தொடர்ந்து செயல்படும்.
இதுதவிர மருத்துவ கல்லூரிகளும் புதிதாக மருத்துவமனை அமைக்கப்படும், இங்கு நோயாளிகளுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறினார். இந்த பேட்டியின் போது நலப்பணி இணை இயக்குனர் பூங்கோதை, அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபு, நிலைய மருத்துவ அதிகாரி சந்தானம் குமார் உள்பட பலர் உடனிருந்தனர்!