அண்ணா பல்கலைக்கழகத்தால் 5 ஆண்டுகளில் ரூ.1,500 கோடி நிதி திரட்ட முடியும். தமிழக அரசின் நிதி பங்கீடு இல்லாமல் பல்கலைக்கழகத்தை நடத்த முடியும். எனவே, உயா் அந்தஸ்தை வழங்க வேண்டுமென்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். இது, அவா் தன்னிச்சையாக எடுத்த முடிவா? அல்லது முதல்வா் ரகசியமாகக் கொடுத்த அனுமதியா? என்று தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பிவருகிறார்கள்.
மேலும் பல்கலைக்கழக வளா்ச்சியில் அக்கறை கொண்டிருக்கும் அனைவருக்கும் சூரப்பாவின் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தி.மு.க தலைவா் மு.க.ஸ்டாலின் அண்ணா பல்கலைக்கழகத்தின் உயா் கல்வியைக் காவி மயமாக்கிட செய்யும் திட்டமிட்ட சதி என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் துணை வேந்தா் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி குமரி மாவட்ட தி.மு.க இளைஞரணி மற்றும் மாணவரணியினர் இன்று நாகா்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரி முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோ தங்கராஜ் உட்பட 500 க்கு மேற்பட்ட இளைஞரணி மற்றும் மாணவரணியைச் சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா்.