![soundrarajan](http://image.nakkheeran.in/cdn/farfuture/oIEeFVGZBfJ6tP65rICzgM_9Kj2DZV531X8_fjEafso/1536162364/sites/default/files/inline-images/soundrarajan.jpg)
சேலம் அருகே, தனிப்பட்டா வழங்க பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் செயல்பட்டு வரும் தாசில்தார் அலுவலகத்தில், நில அளவை பிரிவு செயல்பட்டு வருகிறது. வாழப்பாடி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த இந்திராணி என்பவர் தனக்குச் சொந்தமான இரண்டு வீட்டுமனைகளை அளந்து, தனித்தனி பட்டாவாக வழங்கக்கோரி விண்ணப்பித்து இருந்தார்.
அந்த அலுவலகத்தில் சர்வேயராக பணியாற்றி வரும் சவுந்திரராஜன், அவருடைய மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டார். 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் உடனடியாக நிலத்தை அளந்து பட்டா கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திராணி, அவ்வளவு தொகை என்னால் தர இயலாது என்று மறுத்துள்ளார். பிறகு, பத்தாயிரம் ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டார்.
என்றாலும், லஞ்சம் கொடுத்து பட்டா வாங்க விருப்பம் இல்லாத இந்திராணி, இதுகுறித்து சேலம் மண்டல லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் அவரிடம், ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை கொடுத்து, அந்தத் தொகையை சர்வேயர் சவுந்திரராஜனிடம் கொடுக்கும்படி யோசனை கூறினர்.
அதன்படி, பணம் ரெடியாகி விட்டதாகவும், எப்போது அலுவலகத்துக்கு வந்து தரட்டும் என்றும் சவுந்திரராஜனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், அலுவலகத்திற்கு வந்து கொடுத்தால் மற்றவர்களுக்கு சந்தேகம் வரும் என்பதால், வாழப்பாடி பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு பூக்கடையைக் குறிப்பிட்டு அந்த இடத்திற்கு வருமாறு இந்திராணியை அழைத்தார்.
அதையடுத்து, இன்று காலை 11 மணியளவில் இந்திராணி அந்த பூக்கடைக்குச் சென்று காத்திருந்தார். லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசாரும் அங்குள்ள கடைகளில் பொருள்களை வாங்குவதுபோல் மறைந்து நின்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த சவுந்திரராஜனிடம் இந்திராணி பணத்தைக் கொடுத்தார். இதைப் பார்த்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் பாய்ந்து சென்று அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். சவுந்திரராஜனை வாழப்பாடி தாசில்தார் அலுவலகத்திற்கு நேரில் அழைத்துச்சென்று இதுவரை அவர் எத்தனை பேருக்கு நில அளவைப் பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார்? அதில் யார் யாரிடம் பணம் பெற்றார்? இதில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம், வாழப்பாடி தாசில்தார் அலுவலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.