![10 IAS appointed as District Corona Prevention Officers](http://image.nakkheeran.in/cdn/farfuture/3Fv_6bP1GBmg1GJjUtSQY9OKQZxxpJIp2uEHOamz4io/1620223432/sites/default/files/inline-images/reyy6yer_4.jpg)
தமிழகத்தில் தொடர்ந்து கரோனா இரண்டாம் அலை பரவி வருகிறது. நேற்று 21,228 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 6,228 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து 6,000க்கும் அதிகமான கரோனா தொற்று பதிவாகி வருகிறது. பிற மாவட்டங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து இருந்துவருகிறது. நேற்றைய பாதிப்புகளையும் சேர்த்து தமிழகம் முழுவதும் இதுவரை 12,49,292 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 19,112 ஆக உள்ளது.
இந்நிலையில் 10க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பல்வேறு மாவட்டங்களில் கரோனா தடுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, சென்னைக்கு ஜெயராம் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு சங்கரன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலைக்கு வனிதா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சிக்கு பாண்டியன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கு தினகரன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடுக்கு சஞ்சய் குமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு அமரேஜ் புஜாரி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு லோகநாதன் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வரும் 7 ஆம் தேதி தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ள நிலையில், 7 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மாவட்ட கரோனா தடுப்பு அதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.