ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
நேற்று தேர்தல் பரப்புரையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ''ஏழை வாக்காளர்களை, அவர்கள் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஆடு, மாடுகளை கொட்டகையில் அடைப்பது போல் அடைத்து வைத்துள்ளனர். வாக்காளர்களை விலைக்கு வாங்கி அமர வைத்துள்ளனர். நீங்கள் சரியான ஆம்பளையா இருந்தால்; மீசை வச்ச ஆம்பளையா இருந்தா; சூடு, சொரணை, வெட்கம், மானம் இருந்தால் வாக்காளர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும்'' என பேசியிருந்தார்.
இந்நிலையில் அண்மையில் அதிமுகவின் ஓபிஎஸ் அணியில் இருந்து திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ் பேசுகையில், ''எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்யும் பொழுது தரக்குறைவாக ஒரு மூன்றாம் தர பேச்சாளர்களை போல் வார்த்தைகள் பயன்படுத்தி பேசியதை திமுகவின் சார்பாகவும், திமுக தொண்டர்கள் சார்பாகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம். எச்சரிக்கிறோம். இனிமேல் இப்படி இவர்கள் பேசுவார்களானால் திமுகவுடைய பேச்சாளர்கள் பேசுகின்ற பேச்சை உங்களால் தாங்க முடியாது. தமிழ்நாட்டில் நடமாட முடியாத அளவுக்கு பேச வேண்டிய சூழல் வரும். அதனால் உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள் ஏன எச்சரிக்கிறோம்'' என்றார்.