தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடுவதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பாக திரையரங்குகள் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. சென்னை அமைந்தகரையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பயங்கரவாதம் வேறு தீவிரவாதம் வேறு. ஒரு கருத்தை தீவிரமாக வாதிடுவது, விவாதிப்பது தீவிரவாதம். பயங்கரவாதம் என்பது அந்த கருத்தை சொல்பவனை அழித்து ஒழிப்பது. அந்த பயங்கரவாதத்தை செய்து கொண்டி இருப்பது பாஜக. நீங்கள் மற்றவர்கள் பயங்கரவாதிகள் என பட்டம் கட்டுவதை நிறுத்துங்கள்.
கேரளா ஸ்டோரி என்று மாநிலத்தின் பெயரில் ஒரு திரைப்படம் வருகிறது. அங்கு இருக்கிற 32 ஆயிரம் பெண்கள், இளைஞர்களை மதம் மாற்றி வேறு நாடுகளுக்கு அனுப்பி அவர்களுக்கு பயிற்சி கொடுத்து மீண்டும் நாட்டிற்குள் அனுப்பி குழப்பத்தை ஏற்படுத்துவது போல் அது எடுக்கப்பட்டுள்ளது. இது படத்தினை எடுக்கும் இயக்குநருக்கு தெரிகிறது. உளவுத்துறைக்கு தெரியாதா?. ராணுவத்திற்கு தெரியாதா?. அப்படி ஒரு படம் வரட்டும் அதன்பின் பேசலாம் என காத்திருந்தீர்களா?. மதமாற்றத்தைப் பற்றி பேச உங்களுக்கு தகுதி, அருகதை இருக்கிறதா?. நாங்கள் சைவர்களாகவும், வைணவர்களாகவும், பவுத்தத்தையும் தழுவி இருந்தோம். எங்களை இந்துவாக மாற்றியது யார்?. இங்கிருக்கும் இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் ராபர்ட் க்ளைவ், பாபர் போன்றோர் விட்டுவிட்டுச் சென்ற வாரிசுகள் அல்ல.
தீண்டாமை ஏற்றத் தாழ்வுகளை இந்து மதமே கடைப்பிடிக்கிறது. மனிதனில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இருக்கிறார்கள் என உன் மதம் சொல்கிறது. நான்குவித வர்ணாசிரம கோட்பாடுகள் இந்து தர்மத்தின் ஆன்மா என்கிறது.
அரேபியத்தில் தோன்றிய இஸ்லாமிய மதம் இந்த நாட்டில் பரவியதன் காரணம் நீங்கள் தான். நீங்கள் வைத்திருந்த சாதிய இழிவும் தீண்டாமை கொடுமையும் தான். கேரள ஸ்டோரி, கர்நாடக ஸ்டோரி ஆந்திரா ஸ்டோரி என எந்த ஸ்டோரியும் இங்கே ஓடாது. நீங்கள் மீறியும் காட்சியை நடத்தினால் தியேட்டரை நிறைக்கப் போவதே என் ஆட்கள் தான். கத்துவான். ஒரு காட்சியும் நடத்த முடியாது. எழுத்து போடுவதில் இருந்து கத்துவார்கள். போடாதீர்கள் பிரச்சனை வரும்’ எனக் கூறினார்.