அதிமுகவின் முப்பெரும் விழாவினைக் கொண்டாடவும், தனது பலத்தை நிரூபிக்கவும் திருச்சியில் மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தார் ஓபிஎஸ். திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நடந்த இந்த மாநாட்டில் பல்லாயிரக்கணக்கில் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்தவர்கள் பேசினர். அதில் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர்போல் தொப்பி, கண்ணாடி அணிந்து போட்டோவிற்கு போஸ் கொடுத்ததை பற்றி ஓபிஎஸ் பேசுகையில், ''தனக்குத்தானே அதிமுகவின் பொதுச்செயலாளராக தானே முடி சூட்டிக்கொண்டு. ஐயோ ஒரு கேலிக்கூத்து... எம்.ஜி.ஆர் என்றால் அவருக்கு ஒரு அடையாளம் இருக்கிறது. ஒரு அழகான தொப்பி, கருப்பு கண்ணாடி. அந்த தொப்பிக்கும் அந்த கருப்பு கண்ணாடிக்கும் அழகு சேர்த்தவரே எம்ஜிஆர். அதைப் போட்டுக் கொண்டு கேமராவில் நின்று போஸும் கொடுக்கிறாயே. எவ்வளவு பெரிய அநியாயம். எவ்வளவு பெரிய அக்கிரமம். நீயும் எம்ஜிஆர் ஒண்ணா. அவருடைய கால் தூசிக்கு நீ ஆக மாட்டாய். அவர் ஒரு கருணைக்கடல், அன்பு தெய்வம், கொடை வள்ளல். இந்த இயக்கத்தை தனக்கு பின்னால் யார் வழி நடத்திச் செல்ல வேண்டும் என்று தீர்க்கதரிசனமாக ஜெயலலிதாவை தந்த தலைவர். உனக்கும் அவருக்கும் என்ன இருக்கிறது.
இந்த திருச்சி கூட்டம் 2011 சட்டமன்ற தேர்தலில் எதிர்நோக்கி ஜெயலலிதா எங்களை அழைத்து தமிழ்நாடு தழுவிய முக்கியமான இடங்களில் கூட்டங்கள் நடத்தப்படும் என்று சொன்னதன் அடிப்படையில் முதலில் கோயம்புத்தூர் அடுத்து திருச்சியில் நடத்தினோம். இந்த திருச்சிதான் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தைக் கொண்டு வந்தது. அந்த கூட்டத்தின் மூலமாக அடுத்த முதலமைச்சர் ஜெயலலிதா என்று தீர்மானித்த மாநகரம் இது. இந்த நகரத்தில் பொன்னி நதிக்கரையில் நின்றுகொண்டு நான் கேட்கிறேன் தொண்டனும் கழகத்தினுடைய உச்ச பதவிக்கு வர வேண்டும் என்று எம்ஜிஆர் சொன்ன சட்ட விதி மாற்றப்பட்டு அதிமுகவின் உச்ச பதவிக்கு வருகின்றவர்களை 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழி வேண்டுமாம். பத்து மாவட்ட கழகச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டுமாம், ஐந்து வருடம் தலைமை கழகத்தினுடைய பதவியை வகிக்க வேண்டுமாம்.
என்ன திமிர் உனக்கு. கோடிக்கணக்கான பணத்தை குவித்து வைத்துக் கொண்டு அதை வைத்து மாவட்டச் செயலாளர்களையும், தலைமைக் கழகத்தின் நிர்வாகிகளையும் விலைக்கு வாங்கிக் கொண்டு பொதுச்செயலாளராக வருவதற்காக சட்டவிதியை மாற்றியுள்ளீர்கள். என்னுடைய தலைவர் எம்ஜிஆர் சாதாரண தொண்டன் கூட அதிமுகவின் பொதுச்செயலாளராக வர முடியும் என்ற வரலாற்றை உருவாக்கியவர். இந்தியாவில் அல்ல உலகத்திலேயே முதலில் தலைமை பொறுப்புக்குத்தான் தேர்தல் நடக்கும். அந்த தேர்தலும் அடிப்படை தொண்டர்களால் வாக்கு போட்டு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற சட்ட விதியை கொண்டு வந்து, அந்த சட்ட விதிக்கு உயிர் கொடுத்தவர், உரமேற்றியவர், நின்று காட்டியவர் ஜெயலலிதா. அதையும் மாற்றி விட்டீர்கள். இது ஜெயலலிதாவிற்கு செய்த மிகப்பெரிய துரோகம்''என்றார்.