பாஜகவிற்கு ஆதரவாகவும் திமுகவிற்கு எதிராகவும் பல்வேறு கருத்துகளை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வந்தவர் உமா கார்கி. இவர் திராவிட இயக்கத் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வந்தார். நேற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உமா கார்கிக்கு சிறந்த சமூக செயற்பாட்டாளர் என்ற விருதையும் வழங்கி இருந்தார்.
இந்நிலையில் இன்று காலை உமா கார்கியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த சனிக்கிழமை நடிகர் விஜய் மாணவர்களுக்கான கல்வி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். முன்னதாக அவ்விழாவில் அவர் பேசுகையில் மாணவர்கள் அம்பேத்கர், பெரியார், காமராஜர் குறித்து படிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
சமூக வலைதளத்தில் நடிகர் விஜய்யின் இந்த கருத்துக்கு ஆதரவாகவும் விமர்சித்தும் கருத்துகள் வந்த வண்ணம் இருந்தன. உமா கார்கியும் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார். இது தொடர்பாக விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தினர் காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். கோவையிலும் உமா கார்கி மீது புகார் ஒன்று பதியப்பட்டு இருந்தது. அதில், உமா கார்கி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் முதலமைச்சரையும் தமிழ்நாடு அரசையும் விமர்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து உமா கார்கி இன்று காலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று அண்ணாமலை அவருக்கு விருது கொடுத்ததும் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது குறித்தும் பாஜகவினர் உமா கார்கிக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.