
தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை (04/04/2021) இரவுடன் நிறைவடையும் உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (03/04/2021) சென்னையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, நெல்லை மாவட்டம், தச்சநல்லூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, "பொருளாதாரத்தில் நலிந்த உயர் வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தவர் பிரதமர் மோடி. பிரதமர் விவசாயிகள், மீனவர்களைப் பற்றி கவலைப்படுகிறார்; ஸ்டாலின் தனது மகன் குறித்து கவலைப்படுகிறார். உதயநிதியைப் பற்றி நான் பேசினால் ஸ்டாலினுக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாகிறது. தமிழகத்தின் கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பறைசாற்றி வருகிறார் பிரதமர். அதிமுக - பாஜக தமிழகத்திற்காகப் பாடுபடுகிறது; திமுக - காங்கிரஸ் குடும்பத்திற்காகப் பாடுபடுகிறது. உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க திமுக முயற்சித்து வருகிறது. இது மக்கள் ஆட்சிக்கும், குடும்ப ஆட்சிக்கும் இடையே நடக்கும் தேர்தல். 10 ஆண்டுகளாக சாமானியரின் ஆட்சி நடந்து வருகிறது. திமுக - காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டு அனுமதியை ரத்து செய்துவிடுவார்கள்" என்று குற்றம் சாட்டினார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.