
செலவில்லாமல் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பது திமுக ஆட்சிதான் என்றும் இனி வரும் காலங்களிலும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் உள்ள ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி அவர்களின் இல்லத்தில் ஆத்தூர் தொகுதி பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் பகுதியில் செய்ய வேண்டிய நலத் திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுக்களை கொடுக்க குவிந்தவண்ணம் இருந்தனர்.
அப்போது வீரக்கல்லைச் சேர்ந்த மணிகண்டன், மற்றும் கரிசல்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த ஸ்டாலின் சந்தியாகு, புதுசத்திரத்தை சேர்ந்த மணிகண்டன் ஆகிய மூன்று பேரும் அரசு ஓட்டுநர் பணிக்கான பணி நியமன ஆணையை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கொடுத்து வாழ்த்து பெற்றனர்.
அவர்களை வாழ்த்தி விட்டு பொதுமக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, திமுக தலைவரும், திராவிடமாடல் ஆட்சியின் முதல்வருமான மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் அரசு பணியை வழங்குவதற்கு இதுவே எடுத்துக்காட்டு. ஆத்தூர் தொகுதியைச் சேர்ந்த மூவருக்கும் அரசுப் பணிகள் வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் குக்கிராமத்தைச் சேர்ந்தவர்களே.
கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்காது என்ற நிலை மாறி அவர்களை தேடி அரசு வேலை வாய்ப்பை வழங்கி வருவது தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைந்த திமுக அரசே. இனி வரும் காலங்களில் அரசு பணி ஒரு பைசா செலவில்லாமல் தகுதி வாய்ந்த நபர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்” என்று கூறினார்.