அமைச்சர் மனோ தங்கராஜ் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சத்தில் திருவட்டார் பேரூராட்சிக்குட்பட்ட மீன் சந்தை வளாகத்தில், மீன்சந்தை சீரமைப்பு பணியைத் தொடங்கி வைத்தார்.
இதன் பின் அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சசிகலா கூறியதைப் போன்று முதல்வருக்கு யாரும் தைரியம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. யாருக்கு யார் தைரியம் கொடுப்பது. இது திமுகவை பழித்துப் பேசும் செயல். முதல்வர் யாரிடமிருந்தும் தைரியத்தைப் பெற அவசியம் இல்லை. அவருக்கு எதையும் தைரியமாகக் கையாளத் தெரியும்.
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது பல்வேறு பிரச்சனைக்கள் வரும். அதை இயல்பாகத்தான் முதல்வர் சொல்லியுள்ளார். கட்சிக்காரர்களிடம் தான் முதல்வர் நீங்கள் கொஞ்சம் பார்த்து செயல்படுங்கள் என சொல்லியுள்ளார்.
மாநிலங்களின் சுயாட்சி மீது மத்திய அரசு கைவைப்பதும் மாநிலங்களின் அதிகாரத்தைப் படிப்படியாக கபளீகரம் செய்வதை திமுக தொடர்ந்து கண்டிக்கிறது. ஆளுநர்களும் ஜனநாயக ரீதியாக அவர்களுக்கு வழங்கப்பட்ட கடமைகளை மட்டும்தான் செய்ய வேண்டும். அதைத் தாண்டி அவர்கள் அரசியல் செய்யக்கூடாது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்றார்.
தொடர்ந்து இன்று கன்னியாகுமரியில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், முடிந்த பணிகளை பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்தும் வைத்தார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அம்பேத்கர் மனுவை அப்பட்டமாக எதிர்த்தவர். மனு இருக்கும் வரை நான் இந்த மதத்தில் இருக்கமாட்டேன் எனச் சொல்லிவிட்டு பௌத்த மதத்திற்குச் சென்றார். பிரதமர் மோடி அம்பேத்கர் பாதையில் செயல்படுகிறார் எனக் கூறுகிறார்கள். அப்படி இருக்குமானால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் திமுகவின் முன்னெடுப்பிற்கு அவர்கள் ஆதரிப்பார்களே.
காந்தியின் ஐடியா தான் இந்தியாவின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் என பேசும் பிரதமர் மறுபுறம் சவார்க்கரைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறார். இதில் நாங்கள் எடுத்துக் கொள்வது. பெரியார் சிலைக்கு காவித் துண்டு அணிவிப்போம் என அர்ஜுன் சம்பத் பதிவு போட்டுள்ளார். அம்பேத்கரை தொட்டு பட்ட போடு போதும். பெரியாரை தொட்டால் நிலைமை வேறாகிவிடும்” என்றார்.