பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக பகுஜன் சமாஜ்வாதி கட்சிக்காக அதிக சீட்டுகளை ஒதுக்க தயாராக இருப்பதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடக்கவிருக்கும் நிலையில், பா.ஜ.க. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வருகின்றன. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பா.ஜ.க.வை தோற்கடித்து வருகின்றன. குறிப்பாக சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் கைரானா மற்றும் நூர்பூர் தொகுதிகளில் நடந்துமுடிந்த இடைத்தேர்தல் மிகமுக்கியமானது. இந்தத் தேர்தலில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி அமைத்து வெற்றியும் பெற்றன.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் மெய்ன்பூரி என்ற இடத்தில் நடந்த கட்சிக்கூட்டத்தில் கலந்துகொண்ட சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வைத் தோல்வியடையச் செய்வதில் நாம் உறுதியாக இருக்கவேண்டும் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ‘பகுஜன் சமாஜ்வாதி உடனான நம் கூட்டணி தொடரும். 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ்வாதி கட்சிக்கு கூடுதலாக சீட்டுகளை ஒதுக்கியேனும், பா.ஜ.க. தோல்வியடைவதை நாம் உறுதிசெய்யவேண்டும்’ என தெரிவித்துள்ளார்.