கர்நாடக மாநில பாஜக தலைவராக எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பதவி ஏற்பு விழாவிற்கு சி.டி. ரவி பங்கேற்கப் போவதில்லை எனும் தகவல் வெளியாகி கர்நாடகா பா.ஜ.க.வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டுள்ள அறிவிப்பில், கர்நாடக மாநில பாஜக தலைவராக அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனும், சட்டமன்ற உறுப்பினருமான விஜயேந்திராவை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயம் கர்நாடக மாநில சட்டமன்றத்திற்கு பாஜக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த நியமனம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. கர்நாடகா பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா வரும் 15ம் தேதி பதவி ஏற்கிறார். இந்தப் பதவி ஏற்பு விழாவில் பா.ஜ.க. தலைவர்கள் பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இந்நிலையில், அந்தப் பதவி ஏற்பு விழாவிற்கு கர்நாடகா பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான சி.டி. ரவி பங்கேற்கவில்லை எனும் தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகா பா.ஜ.க. தலைவர் ரேஸில் சி.டி.ரவி உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், எடியூரப்பாவின் மகனான விஜயேந்திரா தேர்வு செய்யப்பட்டுள்ளதால், இதற்கு உட்கட்சியிலேயே சிலருக்கு அதிருப்தி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் சி.டி.ரவி, கர்நாடகா பா.ஜ.க. தலைவர் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை எனும் தகவல் அந்த மாநில பா.ஜ.க. அரசியலில் பெரும் பேசு பொருளாகியுள்ளது. ஆனால், அவர் மத்தியப் பிரதேசம் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அங்கு செல்வதாகவும் அதன் காரணமாகவே பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கவில்லை. மற்றபடி எந்தக் காரணமும் இல்லை எனவும் சொல்லப்படுகிறது.
பா.ஜ.க.வின் அனைத்து தலைவர்களும், தி.மு.க., காங்கிரஸ் என முக்கிய கட்சிகள் அனைத்தும் வாரிசு அரசியலின் பிடியில் சிக்கியிருக்கிறது எனத் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், பிரதமருமான நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரங்களுக்காக வேறு மாநிலங்களுக்கு செல்லுமிடத்திலும் வாரிசு அரசியல் குறித்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில், கர்நாடகாவில் முன்னாள் முதல்வரான பா.ஜ.க.வைச் சேர்ந்த எடியூரப்பாவின் மகன் அந்த மாநிலத்தின் பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது பலராலும் வாரிசு அரசியல் என விமர்சிக்கப்பட்டு வருகிறது.