குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டால் லவ் ஜிகாத்தை தடுக்க வேண்டும் எனக் கர்நாடக பாஜக தலைவர் நளின்குமார் கட்டீல் கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் அடுத்த சில மாதங்களில் தேர்தல் வர உள்ளது. இதற்காக காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக பாஜக தலைவர் நளின்குமார் கட்டீல், பூத் மட்டத்தில் தனது கட்சியினரை சந்திக்கும் பணியைச் செய்து வருகிறார்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள உல்லால் பகுதியில் பூத் கமிட்டியினரை சந்திக்கும் கூட்டம் நடைபெற்றது. அதில் அவர் பேசும்போது, “சாலை, கழிவுநீர் போன்ற சிறிய பிரச்சனைகளில் நாம் கவனத்தைச் செலுத்தக்கூடாது. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் லவ் ஜிகாத்தை தடுக்க வேண்டும். லவ் ஜிகாத்தை தடுப்பதுதான் பாஜகவின் அடிப்படைக் கொள்கை. நீங்கள் லவ் ஜிகாத்தை தடுக்க விரும்பினால் உங்களுக்கு பாஜக தேவை. பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே அதற்கு ஒரு விடை கிடைக்கும்” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் கர்நாடக பாஜக தலைவரின் இந்தப் பேச்சிற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் கூறுகையில், “அவர்கள் வளர்ச்சி பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் வெறுப்புணர்வைத் தூண்டிவிட்டு நாட்டைப் பிளவுபடுத்தப் பார்க்கிறார்கள்” எனக் கூறினார்.