நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அமமுக தோல்வியை சந்தித்தது. சில தொகுதிகளில் டெபாசிட் பெற முடியாத நிலையும் இருந்தது.
இந்தநிலையில் சென்னை அடையாறில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி. தினகரன், மக்களின் தீர்ப்பினை ஏற்று கொள்கிறோம். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. எங்களது கணக்கெடுப்பின்படி ஏறக்குறைய 300 பூத்களில் அ.ம.மு.க.வின் வாக்குகள் பூஜ்யம் என காட்டியுள்ளது. எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே? ஒரு வாக்குச்சாவடியில் அ.ம.மு.க. முகவரின் வாக்கு கூடவா பதிவாகாமல் போயிருக்கும்? இதற்கு தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும். அ.ம.மு.க.வின் செல்வாக்கு போகப்போக தெரியும் என்று கூறினார்.
மேலும் அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் ஜூன் 1ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அசோக்நகர் நடேசன் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் கட்சி நிர்வாகிகள், வேட்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்தும், கட்சியை பலப்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.