Skip to main content

சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க ஜெ.அன்பழகனுக்கு தடை!

Published on 07/01/2020 | Edited on 07/01/2020

 

சட்டமன்றக் கூட்டத்தொடரில் திமுக எம்.எல்.ஏ.ஜெ.அன்பழகன் கலந்துகொள்ள தடை விதித்திருக்கிறார் சபாநாயகர் தனபால். இந்த வருடத்திற்கான தமிழக சட்டமன்ற கூட்டம் கவர்னர் பன்வாரிலால் உரையுடன் 6-ந் தேதி கூடியது. அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 9-ந் தேதி வரை சட்டமன்றம் நடக்கவிருக்கிறது. 

 

j anbazhagan



கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று சபையில் விவாதம் நடந்தது. தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பலர் பேசினர். திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் பேசும் போது, உள்ளாட்சித் தேர்தல் பற்றி சில விசயங்கள் குறிப்பிட, அதற்கு பதில் சொல்ல எழுந்தார் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. 

   

அப்போது அவரைப் பார்த்து ஒருமையில் அன்பழகன் குறிப்பிட, அதிமுக உறுப்பினர்கள் கொந்தளித்தனர். அதற்கு திமுக உறுப்பினர்களும் ஆவேசப்பட்டனர். அப்போது, அன்பழகன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் தீர்மானத்தை அவை முன்னவரான ஓபிஎஸ் கொண்டு வர முயற்சித்தபோது, ‘’அன்பழகன் பேசியது தவறு. அதற்காக வருந்துகிறேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் ‘’ என கேட்டுக்கொண்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 


 

இதனையடுத்து,  ‘’ மறப்போம் ; மன்னிப்போம் ‘’ என்கிற பாணியில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதை கைவிட்டார் ஓபிஎஸ். அதனை சபாநாயகர் தனபால் ஏற்றிக்கொள்ள, அன்பழகனுக்கு எதிரான தீர்மானம் கைவிடப்பட்டது.  இதனைத் தொடர்ந்து அன்பழகன் மீண்டும் பேச முயற்சித்தபோது, அவருக்கு வாய்ப்புத் தரப்படவில்லை. இதனை கண்டிக்கும் விதமாக சபாநாயகரின் இருக்கை அருகே சென்ற அன்பழகன், கையில் இருந்த கவர்னர் உரையை கிழித்து சபாவின் டேபிளில் வீசிவிட்டு வெளியேறினார். 


 

அன்பழகனின் அந்த செயலைக்கண்டு ஒட்டுமொத்த சபையும் அதிர்ச்சியடைந்தது. அன்பழகனின் செயலில் அதிர்ப்தியடைந்த சபாநாயகர், அவர் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் கொண்டு வர ஓபிஎஸ்சை வலியுறுத்தினார். அதன்படி தீர்மானம் கொண்டுவரப்பட, கூட்டத்தொடர் முழுவதும் அன்பழகனுக்கு தடை விதித்து அறிவித்தார் சபாநாயகர். அப்போது, ’’ கூட்டத்தொடர் முழுவதும் வேண்டாம். தண்டனையை குறையுங்கள் ’’ என திமுக துரைமுருகன் கேட்டுக்கொண்டார். 
 


கூட்டத்தொடர் முழுவதும் எனில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் இந்த கூட்டத்தொடர், மார்ச்சில் நடக்கும் பட்ஜெட் கூட்டம், அதன் பிறகு மானிய கோரிக்கைகள் என சுமார் 45 நாட்களுக்கு சபை நடக்கும். அத்தனை நாட்களுக்கும் அன்பழகன் கலந்துகொள்ள முடியாது. அதனால் தான்,  இந்த கூட்டம் 9-ந்தேதி வரை நடப்பதால் அது வரைக்கும் அவருக்கு தடை விதியுங்கள் என கேட்டுக்கொண்டார் துரைமுருகன் என்கிறார்கள் திமுகவினர்.


 

சார்ந்த செய்திகள்