கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் இருந்த ஜமேசா முபீன் என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட காவல்துறையினர் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து பின்னர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
தற்பொழுது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீது யுஏபிஏ (உபா) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கோவையில் கார் வெடித்து சிதறிய விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைதி காப்பது ஏன்? என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். “பயங்கரவாதம் தொடர்பான விஷயங்களில் திமுக அரசு எவ்வித சமரசங்களுக்கும் இடம் கொடுத்து விடக்கூடாது.” என அவர் வலியுறுத்தியுள்ளார்.