காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட நிர்வாகிகளை மாற்றிய விசயத்தில் காங்கிரஸ் கட்சியின் ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் கடந்த 15 ஆம் தேதி அன்று சத்தியமூர்த்தி பவன் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கட்சிக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு உண்டாகி அடிதடி ஏற்பட்டு 3 பேருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ரூபி மனோகரனை இடைநீக்கம் செய்ய 62 மாவட்ட தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றி அது ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. இது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி ரூபி மனோகரனுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில், ஓரிரு தினங்கள் முன்பு இந்திரா காந்தி பிறந்த நாள் விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் இரு பிரிவினராக சென்று இந்திரா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் டெல்லி புறப்பட்டு சென்றனர். அவர்கள் கே.எஸ்.அழகிரி மீது புகார் கொடுக்கச் சென்றதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி. திருநாவுக்கரசர், “கே.எஸ்.அழகிரி தலைவராக ஆகி நான்கு முதல் நான்கரை வருடங்கள் ஆகிவிட்டது. சமீபத்தில் வட்டார அளவில் தேர்தல் நடந்ததில் ஆங்காங்கு ஏதேனும் பிரச்சனை வந்திருக்கலாம். அதில் சில மாற்றுக்கருத்துக்கள் இருந்திருக்கலாம். பேசி தீர்த்திருக்க வேண்டிய விஷயங்கள் அவை. அது சம்பந்தமாக சில கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம். அவைகள் அனைத்தும் பேசித் தீர்க்கப்படும்.
புதிய தலைமையோ பழைய தலைமையோ அதை மத்திய காங்கிரஸ் முடிவெடுக்கும். அவை தனிப்பட்ட முடிவு அல்ல. காங்கிரஸில் யார் நிரந்தர தலைவராக இருந்ததில்லை. மாற்றங்கள் எதார்த்தமாக நடக்கக்கூடிய ஒன்று. அது குறித்து மத்திய காங்கிரஸ் தலைமை முடிவு செய்து அறிவிக்கும்” எனக் கூறினார்.