கன்னியாகுமரியில் பாஜகவின் 9 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “மீனவர்களுக்கு திமுக அரசு என்ன செய்திருக்கிறார்கள் எனச் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. தேர்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டுவோம் என்றார்கள். கட்டினார்களா?” என செங்கல் ஒன்றை தூக்கிக் காட்டி, “இதுதான் அந்த இரண்டு லட்சம் வீடு. திமுக ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் அவர்கள் கட்டிக் கொடுப்பதாக சொன்ன ஒரு வீடு கூட தமிழகத்தில் இல்லை. அதனால் தான் இந்த செங்கல்” என்றார்.
“2026 மார்ச் மாதம் மக்களுடைய பயன்பாட்டிற்கு எய்ம்ஸ் திறக்கப்படும். முதல்வருக்கு பாஜக ஒரு கேள்வி கேட்க கடமைப்பட்டிருக்கிறது. உங்கள் தேர்தல் வாக்குறுதியில் அதே மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என ஒரு வாக்குறுதி கொடுத்தீர்கள். ஒருவேளை நீங்கள் மறந்திருந்தீர்களா. உங்கள் வாக்குறுதி எண் 54. அந்த வேளாண் பல்கலைக்கழகம் எங்கு இருக்கிறது என்றால்” என 'அக்ரி யுனிவர்சிட்டி' என எழுதிய செங்கலை மீண்டும் அண்ணாமலை எடுத்துக் காட்டினார்.
தொடர்ந்து சமூக வலைதளங்களில் கன்னியாகுமரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அளவுக்கு அதிகமாக மக்கள் கூட்டம் இருந்ததாக புகைப்படங்கள் வெளியாகியது. அதேநேரம் அக்கூட்டத்தில் பொதுமக்கள் அதிகமாக கலந்து கொள்ளவில்லை எனவும் அண்ணாமலை பேசிக் கொண்டிருந்தபோதே சிலர் அதிருப்தியில் சென்று விட்டார்கள் என காலி சேருடன் கூடிய புகைப்படம் ஒன்றும் சமூகவலைதளங்களில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அண்மையில் பாஜக கட்சியில் இருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் காலி சேர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, 'அவன் பொய்களை யார் கேட்பார்கள்? மலிவான அரசியலை யார் பார்க்க வேண்டும்? காலி ஓ ஜிம்கானா' எனப் பதிவிட்டுள்ளார்.
அவன் பொய்களை யார் கேட்பார்கள்? மலிவான அரசியலை யார் பார்க்க வேண்டும்? காலி ஓ ஜிம்கானா #AnnamaLIE pic.twitter.com/0dHy3QTvUP
— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram) July 1, 2023