திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி மாபெரும் போட்டி நிலவக்கூடிய ஒரு தொகுதியாக உள்ளது. அதற்கு முக்கியமான காரணம் மிகச் சிறிய தொகுதியாக இருக்கக்கூடிய இந்த கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் கிறிஸ்தவ வெள்ளாளர்கள் அதிகமாக உள்ளனர். மேலும் இஸ்லாமியர்கள், அடுத்ததாக தலித்துகள். பொதுவாகவே தி.மு.க.விற்கு கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் ஓட்டு விழும் என்ற நம்பிக்கையில் கிழக்கு சட்டமன்றத் தொகுதியை தி.மு.க.வுடன் கூட்டணி இருக்கக்கூடிய கட்சியினர் முன்னுரிமை கொடுப்பார்கள்.
இந்த தொகுதியில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 257 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 26 ஆயிரத்து 530 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 39 பேர் என மொத்தம் 2 லட்சத்து 46 ஆயிரத்து 226 வாக்காளர்கள் உள்ளனர். எனவே இந்த சின்ன தொகுதியில் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக இனிகோ இருதயராஜ் தேர்வு செய்யப்பட உள்ளதாக மேலிட வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.
எனவே யார் இந்த இனிகோ இருதயராஜ் என்று விசாரிக்க ஆரம்பித்தோம். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்துள்ள இடைக்காட்டூர் என்ற கிராமத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர் இனிகோ இருதயராஜ். சிறுவயதிலேயே திருச்சி ஜோசப் கல்லூரியில் உள்ள பேராலயத்திற்கு அவருடைய தந்தை உபதேசியார் பணியமர்த்தப்பட்டதால் சொந்த ஊரைவிட்டு திருச்சி மேலசிந்தாமணி பகுதிக்கு குடிபெயர்ந்தார்கள்.
பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்த இனிகோ இருதயராஜ், கார்மெண்ட்ஸ் தொழிலில் நுழைந்து இன்றுவரை கார்மெண்ட்ஸ் தொழிலில் ஏற்றுமதி - இறக்குமதி செய்து வருகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு சென்னை மயிலை உயர் மறை மாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா என்பவரின் ஆலோசனைக்கு இணங்க கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார்.
அதன் தலைவராக இருக்கக்கூடிய இனிகோ இருதயராஜ், தற்போது தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தினுடைய கிளைகளை துவங்கி செயல்படுத்தி வருகிறார். ஒவ்வொரு வருடமும் கிறிஸ்து பிறப்பு விழாவை மிகப் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்து, அதில் முதல் 8 ஆண்டுகள் தி.மு.க. தலைவர் கலைஞரை சிறப்பு அழைப்பாளராக அழைத்து அவரை கௌரவப்படுத்தி கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினார்கள். அடுத்த மூன்று வருடங்கள் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை அழைத்து இந்த கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடி வருகின்றார்கள்.
11ஆம் ஆண்டு விழாவை கடந்த 20ஆம் தேதி காணொளிக் காட்சி மூலம் சென்னையில் 13 மாவட்டங்களைச் சேர்ந்தோர் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர். கடந்த நவம்பர் மாதம் கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட எல்லா கிறிஸ்தவ கோவில்களிலும் நேரடியாகச் சென்று அந்தந்த பங்கு தந்தையர்களையும் மூத்த ஊழியர்களையும் நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார். அதைத்தொடர்ந்து வருகின்ற 27ஆம் தேதி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள அனைத்து பங்கு தந்தையர்களையும் சார்ந்த பொதுமக்களை நேரடியாக வீட்டுக்குச் சென்று சந்திக்க உள்ளதாகத் திட்டமிட்டுள்ளார்.
கிழக்கு சட்டமன்றத் தொகுதி சார்ந்த இஸ்லாமிய அமைப்புகளான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என அனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் சந்தித்துப் பேச உள்ளதாகக் கூறியிருக்கிறார். இந்த கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் மூலம் ரோமன் கத்தோலிக்கர்கள் மட்டும் அல்லாமல் அநேக கிறிஸ்தவ பிரிவுகளை உடைய சபைகளை இந்த இயக்கத்தில் உறுப்பினராக்கி அவர்களுடைய ஆதரவையும் பெற்று வருகிறார்.
கடந்த முறை திமுக கூட்டணியில் இந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜி.ஜெரோம் ஆரோக்கியராஜை விட அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதோடு அமைச்சர் பதவியையும் பெற்றார்.