அ.தி.மு.க.வுக்குள் நிகழும் உட்கட்சி பூசலால் கட்சிக்குள் பெரும் பூகம்பம் வெடித்துள்ளதாக சொல்கின்றனர். முதல்வர் எடப்பாடிக்கும் துணை முதல்வரான ஓ.பி.எஸ்.சுக்கும் இடையில் நடந்துவரும் அதிகார யுத்தம், இப்ப க்ளைமாக்ஸ் கட்டத்தை எட்டியிருக்குதாம். அதிலும் கட்சிக்குள் தனி ஆவர்த்தனம் செய்தபடியே, டெல்லிக்குக் காவடி தூக்கித் தன் மகனுக்கு ஓ.பி.எஸ். அமைச்சர் பதவி கேட்டுக் கொண்டிருப்பதை, எடப்பாடி தரப்பால் ஜீரணிக்க முடியலை.
அதனால் ஓ.பி.எஸ்.சிடம் எது பற்றியும் விவாதிக்காமல், அவரை எடப்பாடி ஒதுக்கியே வச்சிருக்காராம். அதனால் கட்சிக்குள் தனித்தீவு போல் தனிமை ஆக்கப்பட்டிருக்காராம் ஓ.பி.எஸ். மேலும் அவரது துணை முதல்வர் பதவியின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் விதமாய், அமைச்சர் தங்கமணியையும் துணை முதல்வராய் ஆக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் எடப்பாடி. இதையறிந்த இன்னொரு தரப்போ, வன்னியர்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அமைச்சர் சி.வி.சண்முகத்தைத் தான் துணை முதல்வராய் ஆக்கணும்ன்னு போர்க் கொடி பிடிக்குதாம். இத்தகைய முட்டல் மோதல்களால் அ.தி.மு.க. கூடாரம் குழப்பத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.