ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அதிமுக எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி எனப் பிரிந்து கிடக்கும் நிலையில் ஓபிஎஸ் தரப்பு மாநாடு, போராட்டம் என அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக விசாரணையைத் தீவிரப்படுத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவினர் மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் நடத்த தீர்மானித்திருந்தனர்.
அதன்படி கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையைத் தீவிரப்படுத்தக்கோரி இன்று தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் அணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக இந்தப் போராட்டத்தில் ஓபிஎஸ் உடன் அ.ம.மு.க தினகரனும் இணையப்போவதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதன்படி இன்று தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் அ.ம.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அந்தக் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், ''நான் ஆட்சிக்கு வந்தால் மூன்றே மாதத்தில் கொடநாடு பங்களாவில் நிகழ்த்தப்பட்ட கொள்ளையையும், கொலையையும் கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்குவேன் என்று கடந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழக முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார். அந்த உறுதிமொழியை சொல்லித்தான் அவர் ஆட்சிக்கு வந்தார். ஆனால், இன்றைக்கு 30 மாதங்கள் ஆகிவிட்டன. முப்பது மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், இந்த வழக்கு இன்னும் ஆமை வேகத்தில்தான் நடந்து கொண்டிருக்கிறது. முப்பது மாதங்கள் ஆன பின் இந்த வழக்கை அதல பாதாளத்தில் தள்ளிவிட்டு ஒன்றுமே நடக்காதது போல் ஒரு போர்வையை இன்றைக்கு போர்த்திக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சரும் எடப்பாடி ஆதரவாளருமான ஜெயக்குமார் பேசுகையில், ''ஓபிஎஸ் அன்று யாரை எதிர்த்து தர்மயுத்தம் செய்தார். சசிகலா, டி.டி.வி.தினகரன், அவர்களைச் சார்ந்த அந்த குடும்பத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருக்கின்றது என்று சொல்லி தர்மயுத்தம் தொடங்கினார். அப்புறம் டிடிவி காலிலேயே மீண்டும் விழுந்தார். டி.டி.வியே, 'ஓபிஎஸ் என்னை சந்தித்தார்; என் வீட்டுக்கு வந்தார்' என்பதை ஒத்துக் கொண்டார். இதனால் ஓபிஎஸ் எப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பவாதி, எப்படிப்பட்ட சந்தர்ப்பவாத அரசியலை ஓபிஎஸ் அரங்கேற்றுகிறார் என்பதை தமிழ்நாட்டு மக்களும் அதிமுகவினரும் உள்ளபடியே உணர்ந்திருக்கிறார்கள். திரைமறைவில் சந்தித்துக்கொண்ட ஓபிஎஸ், டிடிவி தற்போது பொதுவெளியில் சேர்ந்தார் போல காட்சியளிக்க தற்பொழுது ஆர்ப்பாட்ட நாடகத்தை அரங்கேற்றி உள்ளார்கள்.
திமுக ஆட்சியில் இப்போதைய முதல்வர் ஆணையின்படி மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அதாவது ஐ.ஜி தலைமையில் வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. ஆட்சி மாறிய பிறகு ஐஜி தலைமைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. அவர் தனது 790 பக்க விசாரணை அறிக்கையையும் நீலகிரி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் மூலம் தெரிய வருகிறது. இந்நிலையில் திடீரென இந்த வழக்கை சிபிசிஐடி வசம் மாற்றுகிறார்கள். உதவி கண்காணிப்பாளர் ஏ.எஸ்.பி அந்தஸ்துள்ள ஒரு அதிகாரி விசாரித்து வருகிறார். ஐஜி தலைமையில் 90% முடிந்து 790 பக்கங்கள் அறிக்கை கொடுத்தாச்சு. அதன் பிறகு ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஏன் அவரை விட குறைந்த பதவியில் உள்ள ஏ.எஸ்.பி தலைமையில் இப்பொழுது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனுடைய மர்மம் என்ன?'' என்றார்.