'இல்லம் தேடி கல்வி' திட்டத்தில் தன்னார்வலர்களை இணைப்பது என்பது ஏதேனும் சிக்கலை ஏற்படுத்துமா என்ற பேச்சுக்கள் எழுந்து வந்த நிலையில் தமிழக அரசு சார்பில் கடந்த 28 ஆம் தேதி விளக்கம் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில், 'தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கைதான் செயல்படுத்தப்படும். ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப் போவதில்லை. மாநில அளவிலான கல்விக் கொள்கையை வகுக்கக் கல்வியாளர் அடங்கிய குழு அமைக்கப்படும். 'இல்லம் தேடி கல்வித் திட்டம்' தமிழக மாணவர்களின் கல்வியை மேலும் வலுப்படுத்தும். 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அனைத்து தரப்பு மக்களும் ஆதரிக்கவேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழக பாஜக அண்ணாமலை, ''தமிழகத்தில் நடக்கும் எந்த விஷயம் என்றாலும் அதற்கு பாஜகதான் காரணம் என்று சொல்ல ஒரு கூட்டம் உள்ளது. புதிய கல்விக் கொள்கையில் என்ன தவறை கண்டுபிடித்தார்கள். காங்கிரஸ் ஆட்சியின் பொழுது இரண்டுமுறை கல்விக்கொள்கை கொண்டுவந்து இந்தி படிக்கவேண்டும் என்று சொன்னார்கள். மாநிலங்களின் கருத்துக்களை கேட்டுத்தான் புதிய கல்விக்கொள்கை கொண்டுவரப்பட்டது. ஆளுநர் தன் பணியைத்தான் செய்கிறார். இதில் அரசியல் செய்வது கே.எஸ்.அழகிரிதான். அதிமுக ஒன்றாக, பலமாக இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்'' எனத் தெரிவித்துள்ளார்.