இன்று ஜூன் 12 ஆம் தேதி, மேட்டூர் அணையில் நீர்ப்பாசனத்திற்காகத் தமிழக முதல்வர் தண்ணீர் திறந்து வைத்தார். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு ஆகியோர் உடனிருந்தனர்.
தற்பொழுது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.41 அடியிலிருந்து 103.35 கன அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 69.25 டி.எம்.சியாக உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து மின்நிலையம் வழியாக வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இன்று மாலைக்குள் நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 10,000 கன அடி வரை நீர் திறப்பு அதிகரிக்கப்படும். 90வது முறையாக மேட்டூர் அணை பாசனத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நிகழ்வில் பேசிய முதல்வர், ''உரிய காலத்தில் அதாவது ஜூன் 12 ஆம் தேதி திறந்து வைப்பதிலே மிகுந்த மகிழ்ச்சி. டெல்டா மாவட்ட உழவர்கள் பாசனத்திற்கான நீரினை மிகுந்த சிக்கனமாக பயன்படுத்தி இடுபொருட்களை தேவையான அளவு உபயோகித்து நடப்பு குறுவை பருவத்தில் நெல் விளைச்சலை அதிகப்படுத்த வேண்டும். நமது உழவர்களுக்கும் நடப்பாண்டில் ரூபாய் 75 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தையும் இன்று நான் அறிவிக்கிறேன். 'குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் 2023' என்ற இந்த திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு 45 கிலோ யூரியா, 50 கிலோ டிஏபி, 25 கிலோ பொட்டாஸ் என்ற விகிதத்தில் 2.5 லட்சம் ஏக்கருக்கு தேவையான ரசாயன உரங்கள் முழு மானியத்துடனும், 1.2 லட்சம் ஏக்கருக்கு தேவையான நெல் விதைகள் 50 சதவீத மானியத்திலும், 1,518 ஏக்கருக்கு மாற்று சாகுபடி தொகுப்பு. 625 ஏக்கரில் பசுந்தாள் உர விதைகளும் மானியத்தில் வழங்குவதற்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு காவிரி டெல்டா உழவர்கள் அனைவரும் பாசன நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தி தேவையான ரசாயனத்தை பயன்படுத்தி நெல் சாகுபடி மேற்கொள்ளுமாறு நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பதிலளித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “திமுக ஆட்சியின்போது சென்னை கோயம்பேட்டில் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமாக அதை கட்டினோம். ஆனால் கட்டி முடித்து திறப்பு விழாவிற்கு முன்பு ஆட்சி மாற்றம் நடந்தது. ஜெயலலிதா அம்மையார் அவரது பெயரை வைத்துக் கொண்டு அதை திறந்து வைத்தார்கள். நாங்கள் அதற்கு கவலைப்படவில்லை. அதேபோல் தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் திமுக ஆட்சியில் தான் கட்டினோம். அதை ஆட்சிக்கு வந்ததும் அதிமுக என்ன செய்தது. அது அரசு மருத்துவமனையாக மாற்றி அரசியல் செய்தது. சென்னையில் இன்று ஓடிக்கொண்டிருக்கும் மெட்ரோ திட்டத்தை நாங்கள் தான் தொடங்கி வைத்தோம். கலைஞர் முதல்வராக இருந்த பொழுது நான் துணை முதல்வராக இருந்தேன்.
அப்பொழுது நானே ஜப்பான் நாட்டுக்கு போய் நிதி உதவி பெற்று, அதன் மூலமாக தான் மத்திய அரசினுடைய உதவியை பெற்று அதை நாம் தொடங்கி வைத்தோம். அன்னைக்கு அதை எதிர்த்தவர் மறைந்த ஜெயலலிதா. மெட்ரோவே தேவையில்லை என்று வெளிப்படையாகவே ஜெயலலிதா சொன்னார். ஆனால் திறப்பு விழாவின் போது அவர் பெயரை பொறித்த கல்வெட்டை திறந்து வைத்தார் அதேபோல் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம். அதை கலைஞர் தான் கட்டி வைத்தார். ஆனால் அதிமுக ஆட்சி வந்த பிறகு அதை எப்படி எல்லாம் சீரழித்தார்கள் என்று உங்களுக்கு தெரியும். அதன் பிறகு நீதிமன்றத்திற்குச் சென்று வாதாடி போராடி நிலைநாட்டி இருக்கிறோம். இப்படி நீண்டு கொண்டே போகும். இந்த வரலாறுகள் எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு தெரியாது என்று நினைக்கிறேன்.
அதேபோல அம்மா உணவகம். அதை மூடி விடுவார்கள் மூடி விடுவார்கள் என்று திட்டமிட்டு பிரச்சாரம் செய்தார்கள். அதை இன்னும் மூடவில்லை தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் பள்ளிக்கூடத்துக்கு போகின்ற குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் புத்தகப் பையில் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா படமும், பழனிசாமி படமும் போட்டு மாணவர்களுக்கு கொடுத்தார்கள். நாம் ஆட்சிக்கு வந்த நேரத்தில் அதில் கொஞ்சம் மீந்து போயிருந்தது. அந்த நேரத்தில் அரசு அதிகாரிகள் எல்லாம் என்னிடத்தில் வந்து கேட்டார்கள். இதை மாற்றி விடலாம் உங்கள் படத்தை போடலாம் என்று சொன்னார்கள். யார் படமும் போட வேண்டாம். இருக்கிற படமே இருக்கட்டும். இதனால் பல கோடி ரூபாய் இழப்பு வரும். அந்த இழப்பை அரசு ஏற்றுக் கொள்ளாது. எனவே அப்படியே இருக்கட்டும் என்று சொன்னவன் தான் நான். இதையெல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு நான் நினைவூட்ட கடமை பட்டிருக்கிறேன்” என்றார்.
தமிழர் ஒருவரை பிரதமராக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, ''நான் கேட்ட எந்த கேள்விக்கும் அமித்ஷா பதில் சொல்லவில்லை. தமிழர் ஒருவரை பிரதமராக்குவோம் என சொல்லியிருப்பது உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது. மோடி மீது என்ன கோபமோ தெரியவில்லை. 2024 ஆம் ஆண்டு பாஜகவினுடைய பிரதமர் வேட்பாளராக தமிழர்கள் வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தமிழிசை இருக்கிறார்கள்; முருகன் இருக்கிறார்; ஒருவேளை அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று நான் நினைக்கிறேன்'' என்றார்.