
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாக அவர் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். அதன் பின்னர் அவர் இந்த வழக்கை திரும்ப பெற்றுக்கொண்டார். இருப்பினும், விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்தியத் தண்டனை சட்டம் 376வது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சீமான் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான வழக்கு கடந்த 17ஆம் தேதி (17.02.2025) நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை 12 வாரத்தில் முடிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக நேற்று சீமான் நேரில் ஆஜராகும்படி வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். தொடர்ந்து சீமான் ஆஜராக மறுத்த நிலையில் போலீசார் இன்று ஆஜராக போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில் சீமான் இன்று இரவு ஆஜராக இருப்பதால் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 200 மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர். அதேபோல் பேரிகார்டுகள் அமைக்கும் பணியும் நடைபெற்றது.

வடபழனியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியுள்ள சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இரவு 8 மணிக்கு ஆஜராக உள்ள நிலையில் வளசரவாக்கம் தேவிக்குப்பம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனால் அங்கு அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.