Skip to main content

“2026இல் ஆளுங்கட்சி வரிசைக்கு வருவோம்” - இ.பி.எஸ். பேட்டி!

Published on 28/02/2025 | Edited on 28/02/2025

 

EPS says We will come to the ruling party in 2026

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 25ஆம் தேதி (25.02.2025) 19வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மார்ச் 5ஆம் தேதி அனைத்துக் கட்சிக்கூட்டம் கூட்டப்பட உள்ளது என முடிவெடுக்கப்பட்டது. 2026ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில், நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளை மத்திய அரசு மறுசீரமைப்பு செய்ய வாய்ப்புள்ளது. இதனால் தமிழ்நாடு 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி  சேலத்தில் இன்று (28.12.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாத நாட்களே இல்லை.

அத்தனை செய்திகளையும் பத்திரிகைகளும் ஊடகங்களையும் வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் அரசாங்கத்தில் மட்டும் தூய்மையான அரசாங்கம் நடத்துகிறோம், சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது, தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் இதற்கு நேர்மாறாக உள்ளது. பள்ளியில் படிக்கின்ற சிறுவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. வேலியே பயிரை மேய்வது போன்று ஒரு சில ஆசிரியர்கள் செய்கின்ற தவறு ஒட்டு மொத்த ஆசிரியர்களையும் பாதிக்கும் சூழல் ஏற்படுகிறது. இது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஆசிரிய பெருமக்கள் தெய்வத்திற்குச் சமம். இன்றைய பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை ஆசிரியர்களை நம்பி தான் பள்ளிக்கு அனுப்புகின்றனர்.

ஆகவே  குழந்தைகளுக்கு அரணாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஒரு பயிரை வேலி எவ்வாறு பாதுகாக்கிறதோ அதுபோல் சிறுமிகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. ஒரு சில ஆசிரியர் தவறான செயலில் ஈடுபடுகின்றனர் அது எல்லாம் இனி இருக்கக் கூடாது என இந்த அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சீமான் விவகாரம் தொடர்பாக முழுமையாக எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. சம்மன் அனுப்பப்பட்டதாகச் சிலர் சொல்கிறார்கள். ஊடகத்தில் செய்திகள் வருகின்றன. இந்த வழக்கு நடைமுறையில்  உள்ளது.

அது சரியா தவறா என்பது முழுமையாகத் தெரியாது. காவல்துறை சட்டரீதியாக நடந்து கொள்ள வேண்டும். பாரபட்சம் பாராமல் சட்டப்படி காவல்துறை நடக்க வேண்டும்  என்பது தான் என்னுடைய வலியுறுத்தல் ஆகும். மார்ச் 5ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 2 பேர் கலந்து கொள்வார்கள். அந்த 2 பேரும் அதிமுகவின் நிலைப்பாட்டை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்துச் சொல்வார்கள். நாட்டில் ஆளுங்கட்சி தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் எதிர்க்கட்சிகள். சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அதிமுக தான். இந்த அந்தஸ்து அதிமுகவிற்குத் தான்  உண்டு. வேற எந்த கட்சிக்கு இந்த அந்தஸ்து கிடையாது. அதிமுக தான் மக்களுடைய பிரச்சினையை சட்டரீதியாக எடுத்துச் சொல்லும். மக்கள் வாக்களித்து எதிர்க்கட்சியாக உள்ளது. 2026இல் ஆளுங்கட்சிக்கு வரிசைக்கு வருவோம்” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்