Skip to main content

‘கனவுலகூட நினைக்கல’ கடும் அதிர்ச்சியில் நட்சத்திர வேட்பாளர்கள்

Published on 02/05/2021 | Edited on 02/05/2021

 

Star candidates in shock


தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகளும் பின்னர் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.

 

மாலை 4 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 153 சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 80 சட்டமன்றத் தொகுதிகளிலும், மநீம கூட்டணி 1 சட்டமன்றத் தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன. 

 

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நட்சத்திர வேட்பாளர்களின் வாக்கு நிலவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வானதிசீனிவாசன், அவரின் சொந்தமண்ணில் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவந்திருக்கிறார். அதேபோல், தானும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்துள்ளார். இவற்றையெல்லாம் கொண்டு எப்படியும் அவர் அங்கு வெற்றி பெற்றுவிடுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் அவரை எதிர்த்து நின்ற மநீம தலைவர் கமல்ஹாசன் மற்றும் காங்கிரஸ் மயூரா ஆகியோர் தொடர்ந்து முதல் இரண்டு இடங்களில் மாறி மாறி வந்துகொண்டிருக்கின்றனர். இது வானதி சீனிவாசனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

காரைக்குடி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட எச்.ராஜா, தான் ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருந்த காரணத்தினால், எளிதில் வென்றுவிடுலாம் என கணக்கு போட்டிருந்தார். ஆனால், காலை முதலே, காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி முன்னிலை வகித்துவருகிறார். 

 

ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை குஷ்பு, பாஜகவில் இணைந்ததிலிருந்தே சேப்பாக்கம் தொகுதியை மையப்படுத்தியே வேலை செய்துவந்தார். எப்படியும் அந்தத் தொகுதி கிடைக்கும் என நடிகை குஷ்பு எதிர்பார்த்திருந்தபோது, பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் நடிகை குஷ்பு. இவரை எதிர்த்து திமுக சார்பில் மருத்துவர் எழிலன் போட்டியிட்டார். இந்நிலையில் இன்று காலை முதலே திமுக வேட்பாளர் முன்னிலையில் வகித்துவருகிறார். 

 

போடி தொகுதியில் அதிமுக சார்பில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மற்றும் திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டனர். ஆரம்பம் முதலே பெரிய எதிர்பார்ப்புடன் இருந்த இத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போதும் பெரிய எதிர்ப்பார்ப்புடனே நடந்துவருகிறது. சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் காலை முதல் தற்போது (மாலை 4 மணி) வரை ஒ.பி.எஸ் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் மாறி மாறி முதல் இரண்டு இடத்தில் வந்துகொண்டிருக்கின்றனர். இப்படி சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அது ஓ.பி.எஸ்க்கு அதிர்ச்சியை கொடுக்கும். அதேவேளையில், தோல்வியுற்றாலும் பெரும் அதிர்ச்சியை கொடுக்கும் என அக்கட்சியினர் பேசிவருகின்றனர். 

 


 

சார்ந்த செய்திகள்