அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாக போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, மூன்றாவது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார்.
போடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார். நேற்று (02.05.2021) காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியதிலிருந்தே இருவருக்கும் இடையில் பெரும் போட்டி நிலவிவந்தது. இறுதியில் ஓ.பி.எஸ். 99,804 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், 88,749 வாக்குகளைப் பெற்றார். இதனால் 11,029 வாக்குகள் வித்தியாசத்தில் ஓ.பி.எஸ். வெற்றி பெற்றார்.
வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வந்து, தான் வெற்றி என அறிவிக்கப்பட்ட பிறகு, வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேனி வாக்கு எண்ணிக்கை மையமான கம்மாவார் கல்லூரியில், போடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயா மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் ஓ.பி.எஸ். பெற்றுக்கொண்டார்.
அதன்பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், “அதிமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். எங்களுக்கு, வாக்காளர்கள் அளித்த பொறுப்பை, தீர்ப்பை உணர்ந்து நாங்கள் ஜனநாயகக் கடமை ஆற்றுவோம். தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். எதிர்வரும் காலங்களில் பொறுப்பை உணர்ந்து அரசின் கடமைகளை முறையாக ஆற்றிட வாழ்த்துகிறேன்” என்று கூறினார். இந்தப் பேட்டியின்போது அவருடன் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.