அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் கடந்த அக்டோபர் 17- ஆம் தேதி அன்று நாடு முழுவதும் நடைபெற்றது. இதில், மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். நாடு முழுவதும் உள்ள கட்சியின் மூத்த நிர்வாகிகள் வாக்குச்சீட்டு மூலம் வாக்களித்தனர். அதில், மல்லிகார்ஜுன் கார்கே 7,897 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்தித்தார். காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கும் வாழ்த்துத் தெரிவித்தார். இதன்பின் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “பாஜக, ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார் அமைப்புகளால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளை எதிர் கொள்ளும் பொறுப்பு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன் கார்கேவிற்கு உள்ளது. அந்த வகையில் நாங்கள் அவரைச் சந்தித்த போது நீங்கள் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எப்பொழுதும் உறுதுணையாக இருப்போம் எனத் தெரிவித்தோம்” என்றார்.