திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே நடைபெற்ற தே.மு.தி.க. ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தே.மு.தி.க.வின் துணைச்செயலாளரும், இளைஞரணிச் செயலாளருமான எல்.கே.சுதீஷ், "கூட்டணிக்காக வாருங்கள் என்று பல கட்சிகளிடம் இருந்து அழைப்பு வருகிறது. கூட்டணிக்காக அதிமுக பின்னாடி செல்லவில்லை. அ.தி.மு.க. தான் நம்மைக் கெஞ்சுகிறது; நாம் அவர்களைக் கெஞ்சவில்லை. தே.மு.தி.க. எந்தக் கூட்டணியில் சேர்கிறதோ அந்தக் கூட்டணிதான் வெற்றி பெறும். 2011- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் அ.தி.மு.க. கூட்டணியில் இல்லை எனில் அ.தி.மு.க. என்ற கட்சியே இருந்திருக்காது. விஜயகாந்த் தலைமையில் கூட்டணி அமைத்தால் வரத் தயாராக இருப்பதாக நிறைய கட்சிகள் கூறுகின்றன. மாநிலங்களவை சீட்டுக்காக நான் என்றுமே ஆசைப்பட்டதில்லை. 10.5% இடஒதுக்கீடு கொடுத்தால் வன்னியர்கள் ஓட்டு போடுவார்கள், மற்றவர்கள் போடுவார்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க.- தே.மு.தி.க. இடையே இழுபறி நீடிக்கும் நிலையில், எல்.கே.சுதீஷின் கருத்து இரு கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க. உடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் தே.மு.தி.க. சார்பில் அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், தே.மு.தி.க.வின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.