தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ எனும் பயணத்தைத் தொடங்கி ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு சில கி.மீ தூரம் பாதுகாப்பு வளையத்தோடு நடந்து ஓரிடத்தில் பேசி வருகிறார். புதன் கிழமை காலை புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திலும், மாலை அறந்தாங்கியிலும் அவரது பயணம் தொடர்ந்தது. அறந்தாங்கி பழைய செக்போஸ்ட்டில் தொடங்கி பேருந்து நிலையம் வழியாக அண்ணாசிலை வரை நடந்து வந்தவர் அண்ணாசிலை அருகே, நின்ற வேனில் பேசினார். அப்போது பொன்னார் உடனே மேடைக்கு வரவும் என்று பல முறை கருப்பு முருகானந்தம் அழைத்தும் பொன்னார் மேடைக்கு வரவில்லை.
தொடர்ந்து அண்ணாமலை பேசும் போது “தமிழ்நாட்டில் தி.மு.க.வின் 27 மாத ஆட்சியில் நம்பர் 1 மாநிலம் என்கிறார்கள் எதில் நம்பர் 1, அதிக கடன் வாங்கியதில் முதலிடம். அதாவது ரூ.7.53 லட்சம் கோடி தமிழ்நாட்டுக்கு வாங்கிய கடன். இதில் நம் தலைக்கு ரூ.3.52 லட்சம் கடன் உள்ளது. குடிப்பதிலும் முதலிடம். 5520 டாஸ்மாக் கடை உள்ளது. முதலமைச்சரின் மகனும், மருமகனும் இணைந்து ரூ. 30 ஆயிரம் கோடி சம்பாதித்ததாக பி.டி.ஆர். சொல்லி இருக்கிறார். ஊழலில் நம்பர் 1 மாநிலம். 2 அமைச்சர்கள் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு. அவர்களுக்கு ராஜ மரியாதை. அமைச்சர் பொன்முடி ரூ. 41 கோடி தவறான வருவாயை வைப்புநிதி வைத்திருக்கிறார். ரூ.18 கோடி குவாரி முறைகேடு வழக்கும் உள்ளது. இவர்கள் தான் முதல்வரின் முகவரிகள்.
ஊழல், குடும்ப ஆட்சி வைத்துள்ளவர்களின் கூட்டணி 'இந்தியா'; தனி நாடு கேட்டவர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் தான் இந்தியா. தமிழகத்தில் பிறக்காத தமிழன் மோடி, திருக்குறளில் தான் பேச்சை ஆரம்பிக்கிறார். எல்லாரையும் தமிழ் மொழி படிக்கச் சொல்வார்.
அறந்தாங்கியில் அண்ணன் திருநாவுக்கரசர் பல ஆண்டுகள் வெற்றி பெற்றவர். இப்ப அவர் மகன் ராமச்சந்திரன், அடுத்து பேரன் வருவார். ஆனால் எந்தத் திட்டப்பணிகளும் செய்யல. புதுக்கோட்டை எம்.பி தொகுதி வரணும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளேன். பரிசீலிப்பதாக பதில் கொடுத்திருக்கிறார்கள். 2024 தேர்தலுக்கோ அல்லது 2026 தொகுதி சீரமைப்பிலோ நிச்சயம் புதுக்கோட்டை மீண்டும் எம்.பி தொகுதி வரவேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தை கலைஞர் உருவாக்கினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அரண்மனையில் அமைத்தவர் முடியாட்சி முடிவுக்கு வந்து மக்களாட்சி வரும் என்றார். ஆனால் இங்கே நடப்பது மக்களாட்சியா? முடியாட்சி தான்.
புதுக்கோட்டை சாதாரண மண் இல்லை. எம்.ஜி.ஆர் காலத்தில் திருநாவுக்கரசர், ஆர்.எம்.வீ ஆகியோர் அரசாங்கத்தையே தீர்மானித்தார்கள். ஆளுமை மிக்க மண் புதுக்கோட்டை. நம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுகிறார்கள். படகுகளும் பறிமுதல் செய்யப்படுகிறது. 2017 வரை சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்டது போல, அதன் பிறகு உள்ள படகுகளையும் மீட்போம். இதற்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி மீட்போம்” என்றார்.