அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் கடைசி நாள் பிரச்சாரத்திற்கு மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்கு அனுமதி கேட்டு 12 இடங்களுக்கு 3 நாட்களுக்கு முன்னதாகவே திமுகவினர் விண்ணப்பம் செய்துள்ளனர். ஆனால் தீடீரென அரவக்குறிச்சி தேர்தல் அலுவலர் மீனாட்சி 4 இடங்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்க முடியும் என்று சொல்ல. உடனே இன்று காலை நன்னியூர் ராஜேந்திரன், நாடாளுமன்ற வேட்பாளர் ஜோதிமணி மற்றும் கூட்டணி கட்சியினர் வந்தனர். அனுமதி கொடுக்காமல் வெளியே செல்ல மாட்டோம் என்று தர்ணா இருக்க ஆரம்பித்தார்.
இதற்கு இடையே பத்திரிகையாளர்களிடம் பேசிய செந்தில்பாலாஜி, “தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி அல்லது அனுமதி மறுப்பு குறித்து 36 மணி நேரத்திற்கு முன்னதாகவே சம்மந்தப்பட்டவர்களுக்கு தகவல் தர வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி. ஆனால் அதிகாரிகளும்,போலீசாரும் நாளைய பிரச்சாரத்திற்கு அனுமதி உண்டா, இல்லையா என்பது குறித்து எதுவும் சொல்ல மறுக்கின்றனர். இதுவரை நாளை காலை 10 மணி வரை 4 இடங்களில் பிரச்சாரம் செய்ய மட்டுமே அனுமதி அளித்திருக்கின்றனர்.
தடா கோயில், வாவிகனம், ஈசநத்தம், வேலஞ்செட்டியூர், ஆகிய இடங்களுக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. அதன்பின் இரவு 10 மணிவரையான பிரச்சாரத்திற்கு இதுவரை அனுமதி தரவில்லை. நாங்கள் மக்களை சந்திக்க கூடாது என்று தடுக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அனுமதி வாங்கிவிட்டுதான் இங்கிருந்து செல்வோம்” என்றார்.