தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் மாற்றம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று முன்தினம் ராஜ்பவனிலிருந்து வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு. நாசர் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டார். மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினராக உள்ள டி.ஆர்.பி. ராஜா அமைச்சராகப் பதவியேற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகி இருந்த நிலையில் டி.ஆர்.பி.ராஜாவிற்கான பதவியேற்பு விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை 10.30 மணியளவில் தொடங்கியது.
முதல்வர் முன்னிலையில் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராகப் பொறுப்பேற்றார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் அமைச்சரவை மாற்றம் குறித்தும் சா.மு.நாசர் அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டது குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் “ஆவினில் அதிகமாக முறைகேடுகள் நடக்கிறது. அதிகார துஷ்பிரயோகங்கள் நடக்கிறது. இதனால் பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என சொன்னோம். அப்போதெல்லாம் யாரும் கேட்கவில்லை. இப்போது நாங்கள் சொன்னதெல்லாம் உண்மை என நிரூபிக்கும் விதத்தில் அவரை அமைச்சரவை பதவியில் இருந்து நீக்கியுள்ளது” எனக் கூறினார்.