தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை வெளியீடு ஆகியவை முடிந்து தேர்தல் பிரச்சாரம், பரப்புரை போன்ற பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பிஸியாக உள்ளன. இந்தத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது. தற்போது தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் களைகட்டியிருக்கும் நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் நான்கு நாட்களே உள்ளது. அதிலும் இந்த நேரத்தில் வங்கி ஊழியர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் வங்கி கணக்கு துவங்க முடியாமல் இருக்கின்றனர். எனவே வேட்புமனு தாக்கல் செய்யும் அவகாசத்தை தேர்தல் ஆணையம் நீட்டிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.