கல்லூரி மாணவர்களும் இனி சீருடை அணியவேண்டும் என்ற உத்தரவை சமீபத்தில் ராஜஸ்தான் மாநில அரசு, அனைத்து கல்லூரிகளுக்கும் வழங்கியிருக்கிறது.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ராஜஸ்தான் மாநில கல்வித்துறை அமைச்சர் கிரென் மகேஸ்வரி, ‘கல்லூரி மாணவர்களும் சீருடை வழங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அப்போதுதான் அவர்கள் மற்றவர்களிடம் இருந்து மாணவர்கள் என்ற அடையாளத்தோடு தெரிவார்கள்’ என தெரிவித்திருந்தார்.
ஆனால், மாநில அரசின் இந்த முடிவு சீருடைகளைக் காவி நிறமாக்கும் எண்ணத்தின் வெளிப்பாடு என காங்கிரஸ் கட்சியின் சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் தேவ் சிங், ‘ராஜஸ்தான் அரசு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வழிகாட்டுதலின் பேரில் செயல்பட்டு வருகிறது. முதலில் பாடத்திட்டத்தை மாற்றினார்கள். பின்னர் பள்ளி மாணவர்களின் சீருடை வண்ணத்தை காவி நிறமாக மாற்றினார்கள். இன்று எல்லோரையும் காவியாக மாற்ற முடிவு செய்துவிட்டார்கள். அவர்கள் மாணவர்களை துறவிகளாக மாற்றும் எண்ணத்தில் இருக்கிறார்கள்’ என தெரிவித்திருக்கிறார்.
மாநில அரசின் இந்த முடிவு குறித்து கல்லூரி மாணவர்களிடம் கருத்து கேட்கப்படும் மற்றும் அவர்களது கருத்துகளைத் தெரிந்தபின்னரே இந்த நடவடிக்கை குறித்த அடுத்த முடிவுகள் அறிவிக்கப்படும் என கிரென் மகேஸ்வரி அறிவித்துள்ளார்.