Skip to main content

“வேண்டுமென்றே தமிழகத்தை போராட்ட களமாக்குகிறார்கள்!”- தமிழக கட்சிகள் மீது தமிழிசை காட்டம்!

Published on 07/03/2018 | Edited on 07/03/2018
sivakasi


விருதுநகர் மாவட்டம் – ராஜபாளையத்தில்,  பாரதிய ஜனதா கட்சி – மகாசக்தி கேந்திரம், சக்தி கேந்திரம் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு, சிறப்புரை ஆற்ற வந்திருந்த அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், செய்தியாளர்களை சந்தித்தபோது, 

“பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் வன்முறை மற்றும் சிலை உடைப்பு சம்பவங்களில் ஈடுபட கூடாது என்று பதிவு செய்துள்ளார். பா.ஜ.க. எந்த வகையிலும் வன்முறையை ஊக்குவிக்கும் கட்சி அல்ல.” என்றார்.  அடுத்து, சிவகாசி கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த தமிழிசை சௌந்தர்ராஜன்,

“ஆக்கபூர்வமான அரசியலுக்கு தமிழகம் வழிவகை செய்ய வேண்டும். என்பதுதான் பா.ஜ.க.வின் விருப்பம்.  வளர்ச்சியை நோக்கி தமிழக அரசியல் செல்ல வேண்டுமே தவிர, கிளர்ச்சியை நோக்கி செல்லக்கூடாது என்பதுதான் எங்களது நோக்கம். தமிழகம் உணர்ச்சிக்களமாக, போராட்டகளமாக இருந்துவிடக் கூடாது என்பதுவும் எங்களது நோக்கம். இரண்டு நாட்களாக நடந்துகொண்டிருக்கும் சம்பவங்கள் எந்தவிதத்திலும் விரும்பக்கூடிய சம்பவங்கள் அல்ல. எந்தக் கொள்கை உடையவர்களாக இருந்தாலும், எந்த கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களை மதிக்கக்கூடிய கட்சி பாரதிய ஜனதா கட்சி. கொள்கை ரீதியாக மாறுபட்டாலும், அவர்கள் இந்த சமுதாயத்துக்கு செய்திருக்கும் பங்களிப்பை, எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிடாத கட்சி பாரதிய ஜனதா கட்சி.

நேற்றைய தினம் எச்.ராஜா ஒரு பதிவு போட்டிருந்தார். அவர் போடவில்லை. அவர் சார்பாக போடப்பட்டது என்ற தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப் பதிவு நீக்கப்பட்டிருப்பதோடு அல்லாமல், அதற்கு மன்னிப்பும் கோரியிருக்கிறார் எச்.ராஜா. அதனால், அதை ஏற்றுக்கொண்டு மறுபடியும் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்பதுதான் பா.ஜ.க.வின் கருத்தாக இருக்கிறது. சிலை உடைப்பு சம்பவங்களில் ஈடுபட்டால், உடனே அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று அறிவித்திருக்கிறோம். இன்று அதிகாலையிலேயே, சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட திருப்பத்தூர் ஒன்றிய பொதுச்செயலாளர் முத்துராமன் அவர்களை கட்சியின் அடிப்படை பதவியிலிருந்து நீக்கியிருக்கிறேன். ஆகவே, இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு முத்துராமனின் நீக்கம் ஒரு செய்தியாகவே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், எல்லாம் மன்னிப்பு கேட்ட பின்னும் தமிழகத்தை வேண்டுமென்றே  ஒரு போராட்ட களமாக மற்ற கட்சிகள் எடுத்துச் செல்லக்கூடாது என்பது எனது கோரிக்கையாக இருக்கிறது.” என்று சொன்னபோது நாம் இடைமறித்தோம். 

‘தமிழை ஆண்டாள் கட்டுரையை சர்ச்சை ஆக்கியது இதே எச்.ராஜாதான். கவிஞர் வைரமுத்து வருத்தம் தெரிவித்த பிறகும்,  தமிழகமெங்கும் போராட்டம் நடத்தியதன் பின்னணியில் இருந்தது பா.ஜ.க.தான். தமிழகம் போராட்ட களமாகக் கூடாது என்று இப்போது சொல்கின்றீர்கள். எச்.ராஜாவின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறீர்கள். இந்த கரிசனம் வைரமுத்து விவகாரத்தில் வெளிப்படவில்லையே?’ என்று கேட்டோம். அதற்கு தமிழிசை சௌந்தர்ராஜன் “ஆண்டாள் விவகாரத்தை பா.ஜ.க. முன்னெடுத்துச் செல்லவில்லை. மக்களே முன்னெடுத்துச் சென்றார்கள். நீங்கள் வேண்டுமென்றால் சரிபார்த்துக் கொள்ளலாம். பா.ஜ.க. எந்த ஒரு போராட்டத்தையும் முன்னின்று நடத்தவில்லை.” என்றபோது, ‘ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜீயர் உண்ணாவிரதத்தை முடித்து வைத்ததே எச்.ராஜாவும், நடிகர் எஸ்.வி.சேகரும்தானே? அவர்கள் பா.ஜ.க. கட்சியை சேர்ந்தவர்கள்தானே?’ என்றோம். உடனே, தமிழிசை “கட்சி ரீதியாக, அதிகாரபூர்வமாக அப்படி ஒரு நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடவில்லை.“ என்று சமாளித்தார்.

‘பெரியார் சிலையை உடைத்தவர் மீது நடவடிக்கை எடுத்தது சரிதான். ஆனால், அதற்கு தூண்டுதலாக இருந்த எச்.ராஜாவின் பதிவு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே?’ என்று கேட்டபோது, “எச்.ராஜா தான் பதிவு போடவில்லை என்றிருக்கிறார். மன்னிப்பும் கேட்டிருக்கிறார். சிலை உடைத்தவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியிருக்கிறோம்.” என்று முடித்துக்கொண்டார்.

கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த பா.ஜ.க. தொண்டர் ஒருவர் நம்மிடம் “என்ன சார்? எச்.ராஜா மீது நடவடிக்கை பாயவில்லையே? என்பதுதானே உங்கள் கேள்வி! இந்தம்மா மாநில தலைவர். எச்.ராஜாவோ பா.ஜ.க. கட்சியின் தேசிய செயலர். எச்.ராஜா பேசுறது எல்லாமே தப்புன்னு தமிழிசைக்கு தெரியும்.  ஆனாலும்,  அவரை இவரால் என்ன பண்ண முடியும்?” என்று நொந்துகொண்டார். 

சார்ந்த செய்திகள்