Skip to main content

"பாஜகவை பொறுத்தமட்டில் எங்களுக்கு இரண்டு முகங்கள் இல்லை" - முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

we are not two face bjp concerned jairam ramesh

 

காங்கிரஸ் கட்சியின் 85வது தேசிய மாநாடு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் வரும் 24 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

 

இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் எம்பி வேணுகோபால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசுகையில், "காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாட்டின் முதல் நாள் கூட்டத்தில் வழிகாட்டுக் குழு கூட்டம் நடைபெறும். காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகார அமைப்பான காரிய கமிட்டிக்கு தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும். வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு கூட்டணியை உருவாக்குவதில் காங்கிரஸ் கட்சிக்கு பங்கு உள்ளது. அதற்கான முயற்சியை ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தொடங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சி பல்வேறு கட்சிகளுடன் தொடர்பில் உள்ளது. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் காங்கிரஸ் கட்சி தெளிவான முயற்சியை எடுத்துள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக நிச்சயமாக எதிர்க்கட்சிகளை ஒன்றாகக் கொண்டு வருவோம். ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தின் பிரதிபலிப்பாகவும், உதய்பூர் சிந்தனை அமர்வின் தொடர்ச்சியாகவும் ராய்ப்பூர் தேசிய மாநாடு அமையும்" என்று தெரிவித்தார்.

 

முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில், "நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை முக்கியம் என்பதை காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொள்கிறது. மேலும், இது குறித்து ராய்ப்பூர் தேசிய மாநாட்டில் விவாதிக்கப்படும். எதிர்க்கட்சிகள் அணியை நாங்கள்தான் தலைமை தாங்கி நடத்த வேண்டும் என்று சான்றளிக்க வேண்டியதில்லை. காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வெற்றி பெறாது. எதிர்க்கட்சிகள் ஒற்றுமை தொடர்பான பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கருத்தை வரவேற்கிறோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே பல மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. வலுவான காங்கிரஸ் கட்சி இல்லாமல், வலுவான எதிர்க்கட்சிகள் ஒற்றுமை சாத்தியமேயில்லை.

 

இந்திய ஒற்றுமை பயணம் என்பது இந்திய அரசியலுக்கான மாற்றுருவாக்கத்துக்கான தருணம் ஆகும். அதனை நிதிஷ்குமாரும் ஒப்புக் கொண்டுள்ளார். நாங்கள் இதனை வரவேற்கிறோம். எந்த இடத்திலும் பாஜகவுடன் சமரசம் செய்து கொள்ளாத ஒரே அரசியல் கட்சி காங்கிரஸ் கட்சி தான். சில காட்சிகள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நடத்திய கூட்டத்திற்கு வந்தன. ஆனால், அந்த கட்சிகளின் செயல்பாடுகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக உள்ளன. பாஜகவை பொறுத்தமட்டில் எங்களுக்கு இரண்டு முகங்கள் இல்லை" என்று பேசினார்.  

 

 

சார்ந்த செய்திகள்