அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேதி கடந்த 17ம் தேதி அறிவிக்கப்பட்டு, 18ம் தேதி இ.பி.எஸ். மனுத்தாக்கல் செய்தார். இ.பி.எஸ். மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனச் சொல்லப்பட்டது. இந்நிலையில், ‘அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன்னிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சார்பில் தனித்தனியாக முறையீடு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் அனைத்து தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி குமரேஷ் பாபு, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் மீண்டும் ஒத்தி வைத்தார். இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் பதவி தேர்தலுக்கு எதிராக ஓ.பி.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் எனும் அடிப்படையில் அதிமுகவின் பொதுச்செயலாளராக இ.பி.எஸ். தேர்வாகிறார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், “ஓபிஎஸ் தரப்பினர் புதிய மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு இன்று முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிமுக செல்லும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் செல்லும் என உறுதியாகியுள்ளது
தற்போது அதிமுகவின் அமைப்புத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அந்த தேர்தல் முடிவுகளை தீர்ப்பு வரும்வரை நிறுத்தி வைக்கிறோம் எனக் கூறி இருந்தோம். இந்நிலையில் தற்போது அவர் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை அதிமுக விரைவில் அறிவிக்கும். அதுபோல் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும். அதில் ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கியதும் செல்லும். இத்தீர்ப்பின் மூலம் அதிமுக மிகுந்த வலுவோடு இயங்கும் என்பதை இந்த தீர்ப்பு சுட்டிக்காட்டியள்ளது. நடந்த பொதுக்குழு சட்டப்பூர்வமானது என எடுத்துக்காட்டியுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் அதிமுகவின் தலைமை மற்றும் பொதுச்செயலாளர் எடப்பாடி தான் என்பது நிரூபணம் ஆகியுள்ளது” எனக் கூறியுள்ளார்.