தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு திமுகவே காரணம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. தலைநகர் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். சென்னையில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்காத அதிமுக அரசை கண்டித்து வியாழக்கிழமை திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக மக்களின் குடிநீர் பிரச்சினையை சமாளிப்பதற்கு தண்ணீர் வழங்க தயார் என்று கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் கூறியுள்ளார். தண்ணீர் தர தயார் என்று பினராய் விஜயன் கூறியதற்கு, அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், நன்றி தெரிவித்தார்.
இதற்கிடையே சென்னை அருகே சிங்கப்பெருமாள் கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு திமுகவே காரணம். அவர்கள் ஆட்சியில் இருந்தபோது குடிநீருக்காக எதிர்கால திட்டங்களை செயல்படுத்தவில்லை.
ஏரி, குளங்களை திமுகவினர் ஆக்கிரமிப்பு செய்ததால் தண்ணிரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. திமுக பிரமுகர்கள் நடத்தும் மது தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் செலவழிப்பதை நிறுத்தினால் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கலாம் என்றார்.