மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள ‘மின்சார திருத்த சட்டம் 2020’ சட்டமாக்கப்பட்டால் தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் பறிபோகும், குடியிருப்புகளுக்கு நூறு யூனிட் மின்சாரத்திற்கு வழங்கப்பட்ட சலுகை பறிக்கப்படும் என்று விவசாயிகள் சங்கத்தின் முன்னணி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
மேலும் அவர்கள் கூறியதாவது, அத்தியவசிய பொருட்கள் அவசரச் சட்டம் 2020 நடைமுறைப்படுத்தப்பட்டால், 1955 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் சட்டம் நீர்த்துபோகும் நிலை ஏற்படும். இத்திட்டத்தின் அடிப்படையில் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் பதுக்கி வைத்தால், பதுக்கி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இதனை அவசர சட்ட திருத்தம் மாற்றி அமைக்கும் வகையில் உள்ளது. அப்படி மாற்றி அமைக்கப்பட்டால் உணவுப்பொருட்களில் அரிசி, கோதுமை, எண்ணெய் வித்துகள், மற்றும் சமையல் எண்ணெய், தானியங்கள், உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு வகைகள் போன்றவை பதுக்கினால் அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க இயலாது. எனவே செயற்கையான விலை உயர்வுக்கு வழிவகுக்கும். மேலும் வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர திட்டம் 2020, விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் வேளாண்மை சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் 2020 சட்டங்கள் எல்லாம் விவசாயிகளுக்கு எதிராக அமைந்துள்ளன.
எனவே மேற்கண்ட சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு விவசாயிகள் அமைப்புகள் ஒருங்கிணைந்து போராட்டத்தை துவக்கியுள்ளனர். தமிழகத்தில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழகம் முழுதும் ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து பெரும் இயக்கம் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஜூலை 27ஆம் தேதி நாடு முழுவதும் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில், கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகம் முன்பு கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.ஐ.சகாப்புதீன், துணை தலைவர் என்.ஜெயச்சந்திரன், விக்கிரவாண்டி வட்ட செயலாளர் பி.பாலசுப்பிரமணியம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் தமிழேந்தி, விழுப்புரம் தொகுதி செயலாளர் பெரியார், விவசாயிகள் சங்கத்தின் முன்னணி நிர்வாகிகள் காணை இராமநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.