அண்ணாமலை மேற்கொண்டுள்ள நடைபயணத்தால் அவருக்குத்தான் கால் வலிக்கும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் இன்று இராமேஸ்வரத்திலிருந்து ஊழலுக்கு எதிரான நடைபயணத்தை நேற்று துவங்கி இருக்கிறார். இந்த நடைபயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இதில் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். அண்ணாமலை நடத்தும் இந்த பாதயாத்திரை மூலம் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் எனவும் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் ஒரு மத்திய அமைச்சர் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பதிவு முகாமை அமைச்சர் ரகுபதி பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அண்ணாமலையில் நடைபயணம் குறித்து அவர் பேசுகையில், “அரசியல் செய்வதற்காக நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இதனால் திமுகவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதாக நினைப்பதில்லை. நடைபயணத்தால் ஒரு மாற்றமும் ஏற்படாது. இதனால் அவருக்குத்தான் கால் வலிக்கும்”என்றார்.