Skip to main content

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கு அனுமதி மறுப்பது வேடிக்கையாக இருக்கிறது: ஈ.ஆர்.ஈஸ்வரன்

Published on 19/08/2020 | Edited on 19/08/2020
E.R.Eswaran

 

 

5000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டு விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கு அனுமதி மறுப்பது வேடிக்கையாக இருக்கிறது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார். 

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விநாயகர் சதுர்த்தி வழிபாடு மற்றும் ஊர்வலத்திற்கான அனுமதியை தமிழக அரசு மறுத்திருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் மீதி டாஸ்மாக் கடைகளையும் திறந்து தமிழ்நாடு முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட இடங்களில் கட்டுப்பாடின்றி மக்கள் கூடுவதற்கு வழிவகை செய்திருக்கிறது. 

 

ஒவ்வொரு அமைச்சரும் அவரவர் மாவட்டங்களில் குறுநில மன்னர்கள் போல தொண்டர் படையோடு எந்த கட்டுப்பாடுமின்றி ஊர்வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட இந்த சூழ்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதி மறுத்திருப்பது விநாயகர் பக்தர்களிடையே மேற்கண்ட கேள்விகளை எழுப்புகிறது. 

 

விநாயகர் சதுர்த்தி வழிபாடு என்பது ஓரிடத்தில் மக்களை கூட்டுவது அல்ல. ஒரு நகரத்தில் அந்தந்த பகுதியில் இருப்பவர்கள் 200க்கும் மேற்பட்ட இடங்களில் தனித்தனியாக வழிபடுவது. பெரிய கூட்டம் கூடுவதற்கான வாய்ப்பு கிடையாது. டாஸ்மாக்கில் கூடுகின்ற கூட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டை விட விநாயகர் சதுர்த்தி விழாவில் கட்டுப்பாடுகள் கண்டிப்பாக சிறப்பாக கடைபிடிக்கப்படும். டாஸ்மாக்கிற்கு அனுமதி தராமல் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருந்தால் கொஞ்சம் நியாயமாக தெரியும்.

 

ஆனால் தமிழக அரசு உள்நோக்கத்தோடு செயல்படுவது வெட்டவெளிச்சம். மற்ற மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி அளித்து இருக்கும்  போது தமிழகத்தில் மட்டும் மறுப்பது எந்த விதத்தில் நியாயம். கடுமையான கட்டுப்பாடுகளோடு விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கு அனுமதி அளிக்க வேண்டும்” இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்