செந்தில் பாலாஜி வழக்கு விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் செந்தில் பாலாஜி கைது தொடர்பான 3 மனுக்கள் மீதும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்பட இருக்கிறது என்றும் இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரிய வழக்கின் தீர்ப்பு, செந்தில் பாலாஜியை காவலில் விசாரிக்கக்கோரிய அமலாக்கத்துறையின் மனு உள்ளிட்ட மூன்று மனுக்கள் மீதும் நாளை உத்தரவு வழங்கப்பட இருக்கிறது என்றும் கூறி தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு திமுகவை தனது கூட்டணியில் வைக்க பாஜக எதிர்பார்த்திருக்கும். திமுக கூட்டணிக்கு வராது என்பது தெரிந்ததும் அவர்கள் அதிமுக உடன் சென்றுவிட்டார்கள். இனி கூட்டணி என்றெல்லாம் பேசுவது தவறு. செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை குறித்து இப்போதைக்கு எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. தம்பி செந்தில் பாலாஜி எனக்கு மிக நெருக்கம். அண்ணன், தம்பி உறவினர் போல் பழகிய ஆட்கள். கட்சி அரசியலைத் தாண்டி ஒரு உறவு இருக்கிறது. அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதிலிருந்து சரியாகி விரைவில் வரவேண்டும்.
இதில் கருத்து ஒன்றும் இல்லை. அவர்கள் பழிவாங்க வேண்டும் என்று நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றால் திமுகவும் அதிகாரத்தில் இருக்கும் போது அதைத்தான் செய்யும். எங்களை எல்லாம் எத்தனை முறை சிறையில் போட்டார்கள். பல நாட்கள் என ஓராண்டுக்கும் மேல் சிறையில் இருந்துள்ளேன். கருத்து சொன்னதற்கெல்லாம் குண்டாஸில் போட்டதெல்லாம் இருக்கிறது. ட்விட்டரில் பதிவு போட்டதற்கெல்லாம் குண்டாஸில் போட்டீர்கள். அதையெல்லாம் என்ன சொல்வது. இவர்களுக்கு காயம் ஏற்படும் போது தான் ஜனநாயகம் விதிமுறைமீறல் எல்லாம் வரும். மற்றவர்களுக்கு ஏற்படும் போது எதுவும் வராது” என்றார்.