விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அதிரடி முடிவொன்றை எடுத்துள்ளது அதிமுக.
திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கும் சூழலில் தற்போது இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேதி வெளியிடப்பட்டது. இது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில், 'ஜூன் 14ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கும் எனவும், ஜூன் 21 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து இந்த இடைத்தேர்தலில் திமுக அன்னியூர் சிவாவை வேட்பாளராக அறிவித்துள்ளது. அதேபோல் நாம் தமிழர் கட்சி அபிநயா என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது. இடைத்தேர்தலை எப்போதும் புறக்கணிக்கும் பாமக கூட அன்புமணி என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது. இந்நிலையில் அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பொதுவாக தேர்தல் என்றால் உடனேயே முன்னதாக களத்தில் இறங்குவது அதிமுக தான். தேர்தலைக் கண்டு அஞ்சுகின்ற, பயப்படுகின்ற, அச்சப்படுகின்ற இயக்கம் அதிமுக அல்ல என்பதை அனைவரும் நன்கு அறிவர். தமிழகத்தில் அலங்கோல ஆட்சி நடத்திவரும் திமுகவினர் ஆளும் கட்சி என்ற அதிகார தோரணையோடு அரசு எந்திரங்களை முழுமையாக பயன்படுத்தி நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் பல்வேறு அராஜகங்களையும், தில்லுமுல்லுகளையும் செய்து பெற்றுள்ள வெற்றி என்பது மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவல்ல என்பதை நான் ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன்.
'அராஜகம் என்றால் திமுக... திமுக என்றால் அராஜகம்...' திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு கெட்டுள்ளது. விக்கிரவாண்டி தேர்தல் ஜனநாயக முறைப்படி முழு சுதந்திரமாக நடக்குமா என கேள்வி எழுந்துள்ளது. எனவே இந்த தேர்தலை புறக்கணிக்கிறோம். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் அதிமுக ஆட்சி மலர்வது உறுதி' என தெரிவித்துள்ளார்.