தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சியின் சார்பிலும் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று வருகின்றன. சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவின் சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிப்ரவரி 25ஆம் தேதி முதல் மார்ச் 5ஆம் தேதி வரை விருப்ப மனு வழங்கப்பட்டது. அதில், பிரமேலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன் மற்றும் எல்.கே.சுதேஷ் ஆகியோரும் விருப்ப மனு அளித்துள்ளனர். அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் தேமுதிக அதிக தொகுதிகளைக் கேட்கின்ற நிலையில், பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இந்நிலையில் தேமுதிக, பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் இன்று (06.03.2021) 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினார். கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை முடிவு எட்டப்பட்ட பின்னர் பிரமேலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன் ஆகியோர் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நேர்காணலில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச் செயலாளர் எல்.கே.சுதேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.