தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களைத் தேர்வு செய்து, நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் நிவாரணம் வழங்கியிருந்தார். அதன்படி குடும்பத்திற்கு ஒருவரை அழைத்து பனையூரிலுள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் அரிசி, புடவை, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிவாரண உதவியாக வழங்கியிருந்தார். அவர்களிடம் நேரில் வந்து உதவி வழங்காதது குறித்து விஜய் பேசியதாகத் தகவல் வெளியாகி இருந்தது. அதாவது, நேரில் வந்தால் இது மாதிரி சகஜமாகப் பேசியிருக்க முடியாது. உங்களுடைய குறைகளைக் கேட்டு அறிந்து கொண்டிருக்க முடியாது. நெரிசல் ஏற்பட்டு விடும். அதனால் நேரில் வந்து வழங்கவில்லை என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என விஜய் கூறியுள்ளதாகச் சொல்லப்பட்டது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விஜய்யால் மக்கள் களத்தில் போய் நிற்க முடியாது. காரணம் அவர் அங்குப் போய் நின்றால் பாதிக்கப்பட்ட மக்களை விட அவரை பார்க்க வேண்டும் என்று வருகிற கூட்டம் அதிகமாகிவிடும். இதனைச் சமாளிப்பதே பெரும்பாடாகிவிடும். அப்படி நடந்தால் அதற்கும் ஒரு விமர்சனம் எழும். விஜய்யின் உதவும் எண்ணத்தைப் பாராட்ட வேண்டும். விஜய் செய்ததை கூட மற்றவர்கள் செய்யவில்லை. அவராவது இந்த உதவி செய்கிறார். மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்றால் நீங்கள் ஏன் மத்திய அரசுக்கு வரி செலுத்துகிறீர்கள். மாநிலங்களின் வரிதான் மத்திய அரசுக்கு நிதியாகச் செல்கிறது. எனவே மத்திய அரசுக்குத் தரமுடியாது என்று சொல்லவேண்டும்” எனப் பேசினார்.