எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூட்டிய பொதுக்குழுவைச் செல்லாது என அறிவிக்கக் கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், அ.தி.மு.க.வில் ஜூன் 23- ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த மேல்முறையீடு வழக்கில் விசாரணைகள் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்ராமன் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில், 'கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு செல்லும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வேலுமணி கூறுகையில், ''இன்று நீதிமன்ற தீர்ப்பு ஒன்றரை கோடி தொண்டர்கள், மக்கள் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைத்திருக்கிறது. சட்டப்படி இன்று நீதி வென்றிருக்கிறது. தொண்டர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது. தமிழக மக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வர வேண்டும் என நினைக்கிறார்கள் அதற்கான பிள்ளையார் சுழி இந்த தீர்ப்பு. மேல்முறையீட்டுக்கு போனாலும் மெஜாரிட்டி வேண்டும். எடப்பாடிக்கு 98 சதவிகிதம் ஆதரவு இருக்கிறது'' என்றார்.