தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா நேற்று முன்தினம் தமிழகம் வந்திருந்த நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்மு இன்று தமிழகம் வருகை புரிந்தார்.சென்னை வந்துள்ள திரௌபதி முர்மு நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாஜக கூட்டணிக் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இந்த நிகழ்வில் அதிமுக கலந்துகொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி,''அதிமுகவின் முழு ஆதரவுடன் திரௌபதி முர்மு இமாலய வெற்றி பெற துணைநிற்போம். குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பழங்குடியின பெண்ணை முதல்வர் ஸ்டாலின் ஆதரிக்கவில்லை. திரௌபதி முர்முவை ஆதரிக்காமல் சமூகநீதி எனப் பேசி மக்களை ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார். திமுக- காங்கிரஸ் சூழ்ச்சியால் 2012 குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஏ.சங்மா வெற்றிபெற முடியவில்லை''என பேசியிருந்தார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார். ''ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக மீரா குமார் தேர்வு செய்யப்படுவதற்கு உறுதுணையாக இருந்தது திமுகதான். தனக்கே தெரியாத சமூகநீதி பற்றி திமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி பாடம் எடுக்க வேண்டாம். அதிமுக உட்கட்சி சண்டையில் தனது பதவியைக் காப்பாற்ற பாஜகவை தூக்கிச் சுமக்க ஆசைப்படுகிறார் எடப்பாடி பழனிசாமி'' என தெரிவித்துள்ளார்.