பிரதமர் மோடிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் மத்திய உளவுத்துறை கொடுத்துள்ள ஒரு ரிப்போர்ட் பாஜக மேலிடத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி, பிரதமரை கல்லால் அடிப்பார்கள் என கூறியதாக எழுந்த சர்ச்சைகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடியிடமிருந்து எவ்வித ரியாக்சனும் காட்டப்படவில்லை என்கிற ரிப்போர்ட்தான் அது.
இந்த நிலையில், பாஜகவின் செயற்குழு உறுப்பினர் நரசிம்மன், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள ஒரு கடிதமும் பரபரப்பாகி வருகிறது. பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ’’மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை கல்லால் அடிப்பேன் என காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி கூறியிருப்பதும், அதற்கு எவ்வித கண்டனத்தையும் தெரிவிக்காமல் முதல்வர் எடப்பாடி மௌனம் சாதிப்பதும் பாஜக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக அரசின் முதல்வரான எடப்பாடி, நமது எதிர்க்கட்சியான திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் எம்.பி. ஒருவரின் அநாகரீக செயலை கண்டிக்காமல் இருப்பது துரதிர்ஷ்டம். பிரதமரை கல்லால் அடிப்பார்கள் என அவர் சொன்னதற்கு பிறகுதான் நமது கட்சி சார்பில் கலந்துகொண்ட பிரமுகர், அந்தம்மாவை விமர்சித்தார். இந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடியிடமிருந்து கண்டனம் வெளிப்படாததை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்’’ என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் நரசிம்மன்.