Skip to main content

மாணவியை எரித்துக் கொன்ற அதிமுக கொலைகாரர்கள்!! மிருகச்செயலில் ஈடுபட்டோருக்கு அதிகபட்ச தண்டனை அளிக்க வேண்டும்: வேல்முருகன்

Published on 11/05/2020 | Edited on 11/05/2020
velmurugan



தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூர், அதன் அருகேயுள்ள திருமதுரை கிராமத்தை சோ்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவா். அவர் தன் வீட்டிலேயே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தார். 95 சதவிகித தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்த அவர், அப்பகுதியினரால் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக்  கொண்டுசெல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
 

இந்தக் கோர சம்பவம் தொடா்பாக, திருவெண்ணெய்நல்லூா் காவல்துறையினர் மாணவியிடம் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சோ்ந்த இருவர், முருகன் மற்றும் கலியபெருமாள், தன் மீது பெட்ரோல் ஊற்றி, தீ வைத்து எரித்துக் கொலை செய்ய முயன்றதாகத் தெரிவித்தார். அந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட அந்த பத்தாம் வகுப்பு மாணவி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று மரணமடைந்தார்.


மாணவியின் குடும்பத்தாரோடு இருந்த முன்விரோதம் காரணமாகவே மாணவி கொடூரக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. மாணவியின் தந்தைக்கும், முருகன் தரப்புக்கும் முன்பகை இருந்துள்ளது. மாணவியின் சித்தப்பா, முருகன் தரப்பால் ஏற்கனவே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். அது தொடர்பான வழக்கும் நடந்துவருகிறது. இந்நிலையில்தான், மாணவியை முருகன் மற்றும் கலியபெருமாள் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளனர்.

 


இந்தப் படுகொலையை செய்திட, கரோனா ஊரடங்கு சமயத்தை தேர்ந்தெடுத்தது மட்டுமல்ல; இந்தக் கொலைகாரர்கள் ஆளும் அதிமுகவின் அப்பகுதி நிர்வாகிகள் என்பதுவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும்.

ஆளுங்கட்சி அதிகார மமதையே இந்தக் கொலைக்கு அடிப்படைக் காரணம் என்று சொல்ல முடியும். எனவே இந்த மிருகச்செயலில் ஈடுபட்ட முருகன், கலியபெருமாள் ஆகியோருக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கக் கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்